என் மலர்
தமிழ்நாடு
12 வருடங்களாக சீரமைக்கப்படாத சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- தனியார் கண்டெய்னர் யார்டு அருகே கிராமமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாலூர் அண்ணாநகர், கம்மார்பாளையம், தெலுங்கு காலனி, கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்திற்காக பொன்னேரி-மீஞ்சூர் நெடுஞ்சாலையில் இருந்து கிராமத்திற்கு செல்லும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். அப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கண்டெய்னர் யார்டு,குளிர்பதன கிடங்குகளுக்கு வரும் கனரக வாகனங்களால் இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறி உள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில் சேதமடைந்த சாலை தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்க லாயக்கற்று மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் 12 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட சாலையை சீரமைக்க கோரியும், கண்டெய்னர் யார்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஏரியில் விடப்படுவதை கண்டித்தும், உயர்மின் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவை அகற்ற கோரியும்,தனியார் கண்டெய்னர் யார்டு அருகே கிராமமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த லாரியை சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், வட்டாட்சியர் மதிவாணன் மறியலில் ஈடுபட்டுவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒரு வாரத்தில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் மறியில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.