என் மலர்
தமிழ்நாடு
உடல்களை தாய்நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி- அண்ணாமலை
- குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனை அளித்தது.
- விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை அரசிடம் இருந்து பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
குவைத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 49 பேர் பலியாகிய நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் உயிர் இழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள் ஆவர். அதில் கேரளாவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சார்ந்த 7 பேர் மற்றும் டெல்லி உள்பட மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் 14 பேர் ஆவர்.
இந்த தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேரின் உடல்கள் இந்திய விமான படை விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது.
விமான நிலையத்திற்கு வந்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்பட உயர் அதிகாரிகள் 31 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ள செய்தி மிகுந்த வேதனை அளித்தது. அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்து குறித்த செய்தியறிந்ததும், துரிதமாகச் செயல்பட்டு, உயிரிழந்தவர்கள் உடல்களை தாய்நாட்டுக்குக் கொண்டு வர உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு, நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜக சார்பில், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் இசையமைப்பாளர் தீனா தலைமையில், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை அரசிடம் இருந்து பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.