என் மலர்
தமிழ்நாடு
செங்கம் அருகே விபத்தில் பலியான 7 பேர் உடல்கள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன
- படுகாயம் அடைந்த சதீஷ்குமார் மனைவி காவியா(32) திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- பிரேத பரிசோதனை முடிந்ததும் இறந்தவர்களின் உடல்களுக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பக்கிரிபாளையம் பகுதியில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த கோர விபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள தும்கூர் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 60), மலர் (55), மணிகண்டன் (40), ஹேமந்த் (35), சதீஷ்குமார் (40), சர்வேஸ்வரன் (6), சித்து (3) ஆகிய 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயம் அடைந்த சதீஷ்குமார் மனைவி காவியா(32) திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இறந்தவர்கள் உடல்கள் அனைத்தும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியிலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிந்ததும் இறந்தவர்களின் உடல்களுக்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ, நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து 7 பேரின் உடல்கள் அரசு மரியாதையுடன் தனித்தனி வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.