என் மலர்
தமிழ்நாடு

மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை மற்றும் கிறிஸ்துவ கோபுரம் வெளியே தெரியும் காட்சி.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் முழுவதுமாக தெரிந்த நந்தி சிலை

- கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
- சுற்றுலா பயணிகள் பரிசல் மூலம் சென்று நந்தி சிலை மற்றும் கிறிஸ்துவ ஆலய கோபுரத்தை கண்டு ரசித்து செல்கின்றனர்.
மேட்டூர்:
காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. 124 அடி உயரம் உள்ள மேட்டூர் அணையில் அதிகபட்சமாக 120 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும். பின்னர் அணைக்கு வரும் தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படும்.
மேட்டூர் அணை கட்டப்பட்டபோது அங்கு வசித்த பொதுமக்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து அவர்கள் வழிபட்டு வந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை மற்றும் கிறிஸ்துவ கோபுரங்களை அப்படியே விட்டு சென்றனர். அந்த சிலை மற்றும் கோபுரம் மேட்டூர் அணையில் மூழ்கி காணப்படுகிறது. அணையில் தண்ணீர் குறைந்தால் மட்டுமே அவை வெளியே தெரியும்.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறந்தபோது நீர்மட்டம் 103 அடியாக இருந்தது.
தொடர்ந்து 3 மாதமாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும் நீர்மட்டம் மளமளவென குறைந்து வந்தது. இதன் காரணமாக அணையில் மூழ்கி இருந்த கிறிஸ்துவ கோபுரம் மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை ஆகியவை வெளியே தெரிய ஆரம்பித்தது.
இந்நிலையில் அணைக்கு வரும் அளவை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் மேலும் சரிந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 58.19 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 2ஆயிரத்து 406 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 9ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 23.35 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது.
தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை முழுவதுமாக தெரிகிறது. இதேபோல் கிறிஸ்துவ கோபுரமும் முழு அளவில் தெரிய தொடங்கி உள்ளது. மேட்டூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் மூலம் சென்று நந்தி சிலை மற்றும் கிறிஸ்துவ ஆலய கோபுரத்தை கண்டு ரசித்து செல்கின்றனர். நீர்மட்டம் மேலும் குறைந்தால் நந்தி சிலையின் பீடம் முழுவதும் தெரியும் சூழல் உள்ளது.