search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொள்கை ரீதியாக பா.ஜ.க.வை எதிர்க்கும் காங்கிரசுக்கு நாம் துணையாக இருப்போம்- திருமாவளவன்
    X

    கொள்கை ரீதியாக பா.ஜ.க.வை எதிர்க்கும் காங்கிரசுக்கு நாம் துணையாக இருப்போம்- திருமாவளவன்

    • பா.ஜ.க. என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய ஒரு அரசியல் பிரிவு.
    • மீண்டும் பா.ஜ.க.வை ஆட்சிக்கு வர விடாமல் அனைவரும் ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும்.

    திருச்சி:

    அரசு ஊழியர் ஊழியர் ஐக்கிய பேரவை (மத்திய, மாநில பொதுத்துறை) சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவரும், அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் காப்பாளருமான தொல்.திருமாவளவன் எம்.பி.யின் மணிவிழா திருச்சி கருமண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. எம்.சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    இறுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ஏற்புரை வழங்கி பேசியதாவது:-

    காமராஜரை போல, இன்னொரு வகையில் ராகுல் காந்தியை போல ஒட்டுமொத்தத்தில் புரட்சியாளர் அம்பேத்கரை போல திருமாவளவன் இந்த மண்ணிலே பணியாற்றுகிறார் என்று திருநாவுக்கரசர் என்னை பாராட்டி உள்ளார். இதில் ஒட்டுமொத்த மக்களுக்கான ஒரு தலைவர் உருவாகி இருக்கிறார் என கூறும்போது நான் பெருமைப்படுகிறேன். ஒரு நம்பிக்கையை தரக்கூடிய அளவுக்கு அனைவரின் உரையும் அமைந்திருக்கிறது.

    இன்றைக்கு இந்த மண்ணுக்கு மிகப்பெரும் ஆபத்து மதவெறியர்களால் உருவாகிறது. சனாதன சக்திகளால் உருவாகிவிட்டது. மீண்டும் 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலில் அவர்கள் (பா.ஜனதா) வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவார்களேயானால் அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள். எதையும் துணிந்து செய்வார்கள்.

    அவர்களின் செயல் திட்டம் ஒவ்வொன்றாக இன்றைக்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது. அவர்கள் விரும்பியதைப்போல குடியுரிமை சட்டம், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. என கொண்டு வந்து விட்டார்கள். இந்த ஆட்சி காலம் முடிவதற்குள் பொது சிவில் சட்டத்தையும் நிறைவேற்றக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

    பல இனம், பல கலாசாரம் நிறைந்த இந்த தேசத்தில் மதச்சார்பற்ற அரசு இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். பா.ஜ.க. என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய ஒரு அரசியல் பிரிவு. பா.ஜ.க.வுக்கு என தனி செயல்திட்டம் எதுவும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள்.

    ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே ஆட்சி, ஒரே கட்சி என்ற அடிப்படையில் அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். கொள்கை ரீதியாக பா.ஜ.க.வை எதிர்க்கும் காங்கிரசுக்கு நாம் துணையாக இருக்கிறோம். மீண்டும் பா.ஜ.க.வை ஆட்சிக்கு வர விடாமல் அனைவரும் ஒருங்கிணைந்து தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×