என் மலர்
தமிழ்நாடு
'அமைச்சரவையில் பங்கு' - திருமாவளவன் பகிர்ந்த வீடியோவால் மீண்டும் சலசலப்பு
- திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என திருமாவளவன் பேசி உள்ளார்.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வரலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டில் பங்குபெற அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
திருமாவளவன் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது தமிழக அரசியலில் பரபரப்பையும், தி.மு.க. கூட்டணியில் சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்த சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவையில் பங்கு வேண்டும் என ஏற்கனவே பேசிய பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என அவர் பேசி உள்ளார்.
திடீரென பழைய வீடியோவை திருமாவளவன் பகிர்ந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1999-ல் விசிக இந்த கோரிக்கையை முன் வைத்துதான் அரசியலில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
யாருக்கு என்ன செய்தியை சொல்ல பழைய வீடியோவை தலைவர் திருமாவளவன் தற்போது பகிர்ந்துள்ளார் என்றும் திமுகவிற்கு மறைமுகமாக தனது கோரிக்கையை வைக்கிறாரா திருமாவளவன்? என வலைதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருமாவளவன் வீடியோவை வைத்து சமூக வலைதளங்களில் தொண்டர்கள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.