என் மலர்
தமிழ்நாடு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம்
- மூலவர் சாமிகளுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
- கும்பாபிஷேக நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு கிரிவலப்பாதை அமைந்துள்ளது.
இந்தப் பாதையில் அஷ்டலிங்க சந்நிதிகள் உள்பட ஏராளமான கோவில்கள் அமைந்துள்ளன. இதில், ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள 10 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது.
அதன்படி, கிரிவலம் வரும்போது 8 திசைகளிலும் பக்தர்கள் வணங்கிச் செல்லும் அஷ்டலிங்க சந்நிதிகள், பிற்காலத்தில் உருவான சூரியலிங்க சந்நிதி, சந்திரலிங்க சந்நிதி என மொத்தம் 10 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த ஓராண்டாக திருப்பணிகள் நடைபெற்றது.
தற்போது, பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று அஷ்டலிங்க சந்நிதிகளான இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருணலிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவற்றுக்கும், சந்திர லிங்கம், சூரிய லிங்கம் ஆகிய 10 கோவில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதையொட்டி, 10 கோவில்களிலும் கணபதி பூஜை, மாலை 6 மணிக்கு முதல் கால யாக சாலை பூஜை, வெள்ளிக்கிழமை காலை 2-ம் கால யாக சாலைப் பூஜை, வேத பாராயணம், திருமுறைகள் பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, நேற்று காலை 10 கோவில்களுக்கும் ஒரே நேரத்தில் கோவில்களின் மூலவர் சந்நிதிகள், கோவில் மூலவர் சந்நிதி கோபுரங்கள் மீது யாக சாலைகளில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை ஸ்ரீஅருணாச லேஸ்வரர் கோவில் சிவாச்சாரியர்கள் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
பின்னர் மூலவர் சாமிகளுக்கு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.