search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைதான போலி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி- பாஜக நிர்வாகி மீது நெல்லையிலும் வழக்குப்பதிவு
    X

    கைதான ரூபிநாத்

    கைதான போலி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி- பாஜக நிர்வாகி மீது நெல்லையிலும் வழக்குப்பதிவு

    • கைதான ரூபிநாத் கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவி ஐ.ஏ.எஸ். என்று கூறி பல்வேறு காரியங்களை சாதித்து வந்துள்ளார்.
    • பல சலுகைகளை அவர் பெற்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு பெண் உள்பட 2 பேர் வந்தனர்.

    அப்போது அங்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானை சந்தித்த அந்த பெண், தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும், உத்தரபிரதேசம் மாநில கல்வித்துறையில் உதவி செயலாளராக இருப்பதாகவும் கூறினார். புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் தன்னிடம் பணம் வாங்கி கொண்டு, அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகார் தெரிவித்தார்.

    அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மூலம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் போலி ஐ.ஏ.எஸ். என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த பெண் நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்த மங்கையர்கரசி (வயது 44) என்பதும், உடந்தையாக வந்தவர் தாழையூத்தை சேர்ந்த ரூபிநாத்(42) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து சிப்காட் போலீசார் மங்கையர்கரசி, ரூபிநாத் ஆகிய 2 பேர் மீதும் அரசு ஊழியர் போல் நடித்து அரசு ஊழியரை ஏமாற்றி பணி செய்ய வைத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். ரூபிநாத்தை தூத்துக்குடி பேரூரணி சிறையிலும், மங்கையர்கரசியை நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.

    இதனிடையே கைதான மங்கையர்கரசி குறித்து தற்போது பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளது. மங்கையர்கரசியின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து நெல்லைக்கு வந்துள்ளார்.

    இங்கு சிறிதுகாலம் கல்லூரி பேராசிரியராக பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் தாழையூத்தை சேர்ந்த ரூபிநாத்துடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    தாழையூத்து பகுதியில் மெட்ரிக்குலேசன் பள்ளி நடத்தி வரும் ரூபிநாத், பா.ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட வெளிநாடுவாழ் தமிழர் நலன் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலத்திற்கு மங்கையர்கரசி சென்றுள்ளார். அப்போது நான் உத்தரபிரதேசத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் ரூபிநாத்துக்கு துப்பாக்கி உரிமம் கேட்டிருந்தேன்.

    துப்பாக்கி உரிமம் தொடர்பாக அளித்த மனுவை தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை விசாரிக்க வேண்டாம் என்றும், உடனடியாக அனுமதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் தெரிவித்துள்ளார். மேலும் கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமியிடம் நான் ஐ.ஏ.எஸ். என்று சொல்லியும் துப்பாக்கி உரிமத்திற்கு ஒவ்வொரு ஆவணங்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், உளவுப்பிரிவு போலீசாரிடம் மங்கையர்கரசி குறித்து விசாரிக்க உத்தரவிட்டார். அதில் அவர் போலி ஐ.ஏ.எஸ். என தெரியவந்த நிலையில், நேற்று அவர் தூத்துக்குடியில் சிக்கிவிட்டார்.

    இதையடுத்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி, இந்த சம்பவம் தொடர்பாக மங்கையர்கரசி மற்றும் ரூபிநாத் மீது ஆள்மாறாட்டம் செய்தல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைதான ரூபிநாத் கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவி ஐ.ஏ.எஸ். என்று கூறி பல்வேறு காரியங்களை சாதித்து வந்துள்ளார். ஒப்பந்தங்கள் எடுத்தல், பள்ளிக்கு சலுகைகள் பெற்றுக்கொள்ளுதல் என பல சலுகைகளை அவர் பெற்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×