என் மலர்
தமிழ்நாடு
இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் கடல் அட்டைகள் பறிமுதல்- 3 பேர் கைது
- கடல் அட்டைகள் மருத்துவ குணம் நிறைந்தது. வெளிநாடுகளில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
- கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம்:
மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் 39 வகையான கடல் அட்டைகள் காணப்படுகின்றன. நிலத்தில் விவசாயிகளின் நண்பனாக மண்புழு உள்ளதைப்போல், கடலில் மீனவர்களுக்கு நண்பனாக கடல் அட்டை விளங்குகிறது. கடல் அட்டை 2001-ல் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
கடல் அட்டைகள் மருத்துவ குணம் நிறைந்தது. வெளிநாடுகளில் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக கடல் அட்டைகளை கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள ஆற்றாங்கரை வழியாக இலங்கைக்கு கடத்தி செல்லும் நோக்கத்துடன் ஆம்னி காரில் சுமார் 1 டன் எடை உள்ள கடல் அட்டைகள் கடத்தி செல்வதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறை உதவி உயிரின காப்பாளர் (பயிற்சி) சுரேஷ்குமார் தலைமையில் இன்று காலை பனைக்குளம்-ஆற்றாங்கரை சாலையில் ரகசிய கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
அப்போது பனைக்குளத்தில் இருந்து வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 1 டன் எடை உள்ள கடல் அட்டை மற்றும் 3 பேர் இருந்தனர். இதையடுத்து கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனா். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளையும், கைது செய்யப்பட்ட 3 பேரையும் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் இந்த சம்பவத்தில் மேலும் பலர் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்தது. அவர்களை தேடி வருகின்றனர்.
கடத்தலில் பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர் வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர்.