என் மலர்
தமிழ்நாடு

சூரியன் மறைந்திருக்கிறது.. மழை பொழிகிறது.. தாமரை மலரும் - தமிழிசை சவுந்தரராஜன்

- தென்னிந்தியாவில் வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்துள்ளது.
- சென்னை முழுக்க குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் வெப்பநிலை இயல்பை விட அதிகளவில் பதிவானது. எனினும், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கடந்த ஒரு வார காலமாக தென்னிந்தியாவில் வழக்கத்தை விட அதிகளவு மழை பெய்துள்ளது.
அந்த வகையில், தலைநகர் சென்னையில் நேற்றிரவு முதல் மழை பொழிகிறது. இதனிடையே சென்னையில் பா.ஜ.க. சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் திறக்கும் விழாவில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். கோடை காலம் என்பதால் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்ட நிலையில் மழை பெய்ததால் சென்னை முழுக்க குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது.
இதையடுத்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்த தமிழிசை சவுந்தரராஜன், பொது மக்களுக்கு குளிர்பானம், பழ வகைகளுடன் சுடச்சுட உணவு வழங்கினார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், "கோடை காலம் என்பதால் தண்ணீர் பந்தல் அமைத்தோம், என்றாலும் மழை பெய்து வானமே தண்ணீரை கொடுத்துவிட்டது. ஆனாலும், நாங்கள் சூடான சாப்பாடு கொடுக்கிறோம். நாங்கள் எல்லாவற்றுக்கும் தயாராகவே இருந்தோம்."
"நாம தண்ணீர் கொடுக்கும் முன், வானமே தண்ணீர் கொடுத்ததில் மகிழ்ச்சி. சூடு தணிப்பதில் அக்கறையுடன் இருக்கிறோம். சூரியன் மறைந்திருக்கிறது. அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சி. மழை பொழிகிறது. மழை பொழிந்தால் குளங்கள் நிரம்பி தாமரை மலரும்," என்று தெரிவித்தார்.