என் மலர்
தமிழ்நாடு
கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
- மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைக்க கூகுளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
தமிழகத்தை தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக்குவதற்கும், 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை எட்டுவதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக முதலமைச்சர் துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வந்தார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த 27-ந் தேதி சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அங்குள்ள சான்பிரான்சிஸ்கோ சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அங்கு நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் அவர் பங்கேற்றார். இதில் முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழகத்தில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரே நாளில் ரூ.900 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் தலைமை அலுவலகத்தில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளன.
தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைக்க கூகுளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ், 20 லட்சம் மாணவர்களுக்கு ஏ.ஐ. திறன் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து ஆப்பிள், கூகுள், மைக்ரோ சாப்ட் நிறுவனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.