என் மலர்
தமிழ்நாடு
திருவண்ணாமலையில் கவர்னர் ஆர்.என்.ரவி கிரிவலம்- அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தார்
- இன்று காலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கவர்னர் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
- திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர்.
வேங்கிகால்:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று மதியம் திருவண்ணாமலைக்கு வந்தார்.
அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் புத்தகம் கொடுத்து வரவேற்றார். தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து வந்த கவர்னர் ரவி, கிரிவலப்பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களை சந்தித்து பேசி அன்னதானம் வழங்கினார்.
இதனை தொடர்ந்து திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வள்ளலார் ஆசிரமத்தில் தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கம் சார்பில் விவசாயிகளுடனான ஓர் சந்திப்பு என்ற நிகழ்ச்சியில் தமிழக கவா்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூட்டரங்கில் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்டு இருந்த விளைபொருட்களை பார்வையிட்டார்.
பின்னர் கவர்னர் அவரது குடும்பத்துடன் கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரமம் மற்றும் யோகி ராம்சுரத் ஆசிரமத்தில் தரிசனம் செய்த பின்பு நேற்று இரவு சுற்றுலா மாளிகையில் தங்கினார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கவர்னர் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், நவகிரக சன்னதி தொடர்ந்து பாதாள லிங்கத்தை தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அறங்காவல் குழு தலைவர் ஜீவானந்தம் தலைமையிலான உறுப்பினர்கள் மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
கிரிவலப் பாதைக்கு சென்று நிருதி லிங்கத்தில் சாமி தரிசனம் செய்த கவர்னர் அங்கிருந்து தனது மனைவி மற்றும் மகளுடன் கிரிவலம் சென்றார். திருநேர் அண்ணாமலையார் சன்னதி வரை சென்று நிறைவு செய்தார்
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். கிரிவலத்தை முடித்த பின்பு ஜவ்வாது மலைக்கு புறப்பட்டு சென்றார்.
இன்று மாலை காவலுார் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றுவிட்டு செஞ்சிக்கோட்டை செல்கிறார். கவர்னர் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.