என் மலர்
தமிழ்நாடு
திம்பம் மலைப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து நெரிசல்- வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
- தமிழகம்-கர்நாடகா எல்லையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- மலைப்பகுதியில் 16 டன் எடை அளவு உடைய லாரிகள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பகுதி 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். தமிழக-கர்நாடக இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி இருந்து வருகிறது.
இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தை, புலி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
இந்த மலைப்பகுதியில் 16 டன் எடை அளவு உடைய லாரிகள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலமாக இந்த பகுதியில் 25 டன் வரை எடை உள்ள லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வருவதால் திம்பம் மலைப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையும் திம்பம் மலைப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் சாலையின் இருபுறங்களில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தொலைவு வரை அணிவகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கிய காரணம் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் அளவு கொண்ட லாரிகள் இயக்க அனுமதிக்கப்படுவதே ஆகும் என வாகன ஓட்டிகள் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
வனத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எடுத்துள்ளனர். இதன் காரணமாக தமிழகம்-கர்நாடகா எல்லையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.