என் மலர்
தமிழ்நாடு
சர்க்கரைக்கு பதிலாக மெக்னீசியம் சல்பேட் கலந்த பால் குடித்த குழந்தைகள் 4 பேருக்கு தீவிர சிகிச்சை
- நேற்று இரவு ராபிக் குழந்தைகளுக்கு பால் கலந்து கொடுத்துள்ளார்.
- கால், மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றுக்கு சுடுநீரில் மெக்னீசியம் சல்பேட்டை கலந்து ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கி வந்துள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா. கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராபிக் (வயது 23). இவர்களுக்கு இனாமல் ஸசன் (4) மற்றும் 10 மாத கைக்குழந்தை பாத்திமா ஆகியோர் உள்ளனர். இவர்களது உறவினரான நத்தம் அம்மா பட்டியைச் சேர்ந்த புரோஸ்கான் குழந்தைகளான முகமது சுகைல் (11), முகமது சுனைல் (4) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
தற்போது விடுமுறை என்பதால் அவர்கள் இருவரும் ஷேக் அப்துல்லா வீட்டுக்கு வந்தனர். நேற்று இரவு ராபிக் குழந்தைகளுக்கு பால் கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்த 4 குழந்தைகளும் அடுத்தடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பாலை சோதனை செய்துள்ளார். அப்போது சர்க்கரைக்கு பதிலாக மெக்சீனியம் சல்பேட் என்ற வேதிப்பொருளை கலந்து கொடுத்தது தெரிய வந்தது.
கால், மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றுக்கு சுடுநீரில் மெக்னீசியம் சல்பேட்டை கலந்து ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கி வந்துள்ளது. இதற்காக கற்கண்டு போன்ற வடிவம் கொண்ட மெக்னீசியம் சல்பேட்டை சமையல் அறையில் சேக் அப்துல்லா வைத்துள்ளார். அதனை கவனிக்காமல் பாலில் கலந்து கொடுத்ததால் குழந்தைகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
4 குழந்தைகளுக்கும் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.