என் மலர்
தமிழ்நாடு

கடலூர் ஆசிரமத்தில் கதவை உடைத்து தப்பிய மேலும் 2 பேர் சிக்கினர்

- கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- பெங்களூருவை சேர்ந்த ஒரு நபரும், கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு நபரும் தனது சொந்த ஊருக்கு சென்றது தெரியவந்தது.
கடலூர்:
விக்கிரவாண்டி அடுத்த குண்டலப்புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமம் உரிய அனுமதியின்றி இயங்கி வந்தது. அங்கு தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக ஆசிரமத்தை நிர்வாகித்து வந்த ஜூபின் பேபி உள்பட 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அங்கிருந்து மீட்கப்பட்ட 143 பேரை பல்வேறு ஆசிரமங்களுக்கு அனுப்பி வைத்தனர். அந்த வகையில் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 13 பேர் கடலூர் வன்னியர் பாளையத்தில் அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் மனநல காப்பகத்திலும், 10 பேர் ஆல்பேட்டையில் உள்ள மனநல காப்பகத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வன்னியர் பாளையத்தில் உள்ள காப்பகத்தில் இருந்து 4 பேர் பின்பக்க கதவை உடைத்து தப்பிவிட்டனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை தேடி வந்தனர்.
இதில் அன்றைய தினமே கடலூர் திருப்பாதி ரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ஒருவரை போலீசார் பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடிவந்தனர்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிக்கால் பாரிசங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர்கள் தவச்செல்வம், சங்கரலிங்கம் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
தப்பிச் சென்ற 3 பேரும் பஸ் அல்லது ரெயில் மூலம் தப்பித்து சென்று இருக்கலாம் என போலீசார் அவர்கள் புகைப்படம் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் சொந்த ஊரில் உள்ள உறவினர்கள் மற்றும் அதன் அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் தப்பித்து போனவர்கள் வந்தால் தகவல்கள் தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஒரு நபரும், கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு நபரும் தனது சொந்த ஊருக்கு சென்றது தெரியவந்தது. அவர்களை கடலூருக்கு அழைத்துவர அவர்களது உறவினர்களிடம் கடலூர் போலீசார் கூறியுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.