என் மலர்
தமிழ்நாடு
ஓட்டப்பிடாரம் அருகே மரத்தில் கார் மோதி கவிழ்ந்து 2 பெண்கள் பலி
- ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலை அருகே வந்தபோது திடீரென கார் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்தது.
- விபத்தில் சங்கரேஸ்வரி, மருதாயி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓட்டப்பிடாரம்:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டிபட்டியை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 65). இவரது மனைவி சங்கரேஸ்வரி. இவர்களுக்கு 4 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர்.
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பழனிசாமியின் மகள் பிரபாவுக்கு திருச்செந்தூரை சேர்ந்த வாலிபருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
அவருக்கு சோறு சமைத்து கொடுக்கும் சடங்கிற்காக பழனிசாமி, சங்கரேஸ்வரி, அவர்களது மகன்கள் கனக தர்மராஜ்(40), சங்கர்(38), ராமர், மருமகள் முத்துலெட்சுமி(35), மற்றும் அவர்களது குழந்தைகள், உறவினரான அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை மருதாயி(55) உள்பட மொத்தம் 11 பேர் ஒரே காரில் திருச்செந்தூர் புறப்பட்டு சென்றுள்ளர்.
காரை சங்கர் ஓட்டி சென்றார். இன்று காலை சுமார் 7 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்குச்சாலை அருகே வந்தபோது திடீரென கார் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரம் இருந்த வேப்ப மரத்தின் மீது கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் காரில் இருந்தவர்கள் அலறல் சத்தம் போட்டனர். இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து ஓட்டப்பிடாரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் காரின் இடிபாட்டுக்குள் சிக்கியிருந்த 11 பேரையும் மீட்டனர். இந்த விபத்தில் சங்கரேஸ்வரி, மருதாயி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த கனக தர்மராஜ், அவரது மனைவி முத்துலெட்சுமி, அவர்களது மகன் நிவித்குரு(7), ஓவியாஸ்ரீ(10) மற்றும் பழனிசாமி, அவரது மகன்கள் சங்கர், ராமர்(35), சங்கரின் குழந்தைகள் பீமஹி(10), பீமன்(7) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
உடனே அவர்கள் 9 பேரையும் மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த 2 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.