என் மலர்
தமிழ்நாடு
உதயநிதி ஸ்டாலினுக்காக தலைமைச்செயலகத்தில் உருவான அலுவலகம்
- தலைமைச்செயலகத்தின் பிரதான கட்டிடத்தின் 2-வது தளத்தில் சட்டத்துறை செயலாளர் கோபிகுமார் அறைக்கு அருகே உதயநிதி ஸ்டாலினுக்கு அறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
- அறையை இரவு பகலாக பணியாற்றி, பிரமாண்டமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்.
சென்னை:
தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு பதவி ஏற்கிறார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப்பிரமாணமும் கவர்னர் ஆர்.என்.ரவி செய்து வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து தலைமைச்செயலகத்தின் பிரதான கட்டிடத்தின் 2-வது தளத்தில் சட்டத்துறை செயலாளர் கோபிகுமார் அறைக்கு அருகே உதயநிதி ஸ்டாலினுக்கு அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த அறையை இரவு பகலாக பணியாற்றி, பிரமாண்டமாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்.
ஆயிரம் சதுர அடிக்கும் அதிக பரப்பளவில், தெற்கு திசை பார்த்த வாசலுடன் அமைச்சரின் மொத்த அலுவலக அறை உருவாக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் அமரும் அறை சுமார் 600 சதுர அடிப்பரப்பில் உள்ளது. அமைச்சரின் நேர்முக உதவியாளருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓய்வறை, சாப்பாட்டு அறை, சிறிய கூட்ட அரங்கு மற்றும் கழிப்பறை ஆகியவை உள்ளன. அறையின் பல இடங்களில் நெருக்கமாக பிரகாசமாக ஒளிரும் குழாய் வடிவ எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டுள்ளன. அழகிய அலங்கார தொங்கு விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
அனைத்து அறையிலும் ஏ.சி. எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 6 ஏ.சி.கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், 85 இன்ச் அகலம் கொண்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள டி.வி. நிறுவப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் பலருடனும் வீடியோ கான்பரன்சிங் நடத்தும் நவீன வசதி அந்த டி.வி.யில் உள்ளது.