search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்
    X

    வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்

    • பருவ கால பழங்கள் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை தவறாமல் தினந்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    • புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும், பழைய உணவுகளை சாப்பிட வேண்டாம்.

    கோவை:

    தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலைகளில் இருந்து தற்காத்து கொள்ள பொது சுகாதார துறை பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறியிருப்பதாவது:-

    தினமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிறைய தண்ணீர் பருக வேண்டும், தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் பருக வேண்டும் என்ற நிலையில் இருக்கக் கூடாது. வெளியில் செல்லும் போதும், பயணத்தின் போதும் குடிநீரை தவறாமல் எடுத்துக் செல்லுங்கள். உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கவும், உடல் வெப்பத்தினை தணிக்கக் கூடிய ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை சாறு, இளநீர், மோர், பழச்சாறுகள், பருவ கால பழங்கள் மற்றும் நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளை தவறாமல் தினந்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மெல்லிய தளர்வாக பருத்தியினால் ஆன வெளிர்நிற ஆடைகளை அணியலாம். மதிய நேரங்களில் வெளியில் செல்லும் போது குடை அல்லது தொப்பி போன்றவற்றை உபயோகப்படுத்தி நேரடி சூரிய வெப்பத்தில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகளை தவறாமல் அணிய வேண்டும்.

    நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த பகுதிகளில் இருக்க வேண்டும். நேரடி சூரிய ஒளி மற்றும் வெப்ப அலைகளை தடுக்கவும், பகலில் ஜன்னல்கள் மற்றும் திரைச்சீலைகளை மூடி வைக்கவும், குளிர்ந்த காற்றை உள்ளே அனுமதிக்க இரவில் அவற்றை திறக்கவும். வெளியில் செல்வதாக இருப்பின் பகல் நேரத்தினை தவிர்த்து காலை அல்லது மாலையில் உங்கள் பணிகளை திட்டமிடவும்.

    கடுமையான வெப்பத்தின் காரணமாக யாரும் எந்த நேரத்திலும் வெப்ப அழுத்தம் மற்றும் வெப்பம் தொடர்பான நோயால் பாதிக்கப்படலாம் என்பதால் கீழ்க்காணும் நபர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

    கைக்குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், திறந்தவெளியில் வேலை செய்பவர்கள், மனநோய் உள்ளவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக இதயநோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள். குளிர்ந்த காலநிலை பகுதியில் இருந்து வெப்பமான காலநிலை பகுதிக்கு வரும் நபர்கள் தங்களது உடல், வெப்பமான சூழலிற்கு பழகுவதற்கு ஒருவார காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் மற்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    தனியாக வாழும் வயதானவர்கள் மற்றும் நோய் வாய்ப்பட்டவர்களின் உடல் நலம் தினசரி கண்காணிக்கப்பட வேண்டும். பகலில் கீழ்தளங்களில் இருக்க முயற்சி செய்யுங்கள். உடலை குளிர்விக்க மின்விசிறி, ஈரத்துணிகளை பயன்படுத்தவும்.

    வெப்பமான சூழலில் வெயிலில் செல்லும் காலஅளவு குறைத்துக் கொள்ள வேண்டும். கடுமையான வெயிலின் கீழ் கடுமையான உடல் செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும், கோடை கால கடுமையான வெப்பமான சூழ்நிலையில் பணிபுரிவோர் நேர இடைவெளி விட்டு பணிபுரிய வேண்டும்.

    பணிபுரியும் இடத்திற்கு அருகில் குளிர்ந்த குடிநீர் வழங்கப்பட வேண்டும், நீரோற்றமாக இருக்க ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் அல்லது அதற்கும் அதிகமாக அடிக்கடி தண்ணீரை உட்கொள்ள வேண்டும்.

    பணிச்சூழலில் வெப்பநிலையை ஈரப்பதம் மற்றும் சரியான காற்றோட்டம் ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்தலாம். தலைவலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் அந்த நபரை குளிர்ந்த சூழலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மேலும் போதுமான குடிநீர் வழங்கப்பட வேண்டும். தேவையான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

    குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கவும், மதிய வேளைகளில் கடினமான செயல்களை தவிர்க்கவும்.

    மதியவேளையில் சமைப்பதை தவிர்க்க வேண்டும், சமையல் செய்யும் இடத்தை போதுமான அளவு காற்று வரும் பொருட்டு கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறக்கவும்

    மது, தேநீர், காபி மற்றும் குளிர்பானங்கள் அல்லது அதிகளவு சர்க்கரை கொண்ட பானங்கள் ஆகியவற்றை உட்கொள்வதை தவிர்க்கவும். இவை அதிக நீர்ச்சத்தை இழக்க வழிவகுக்கும். புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும், பழைய உணவுகளை சாப்பிட வேண்டாம். நிறுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனத்தில் குழந்தைகளையோ, செல்லப்பிராணிகளையோ உள்ளே வைத்து விட்டு செல்ல வேண்டாம். வாகனத்தின் உள்ளே வெப்பநிலை ஆபத்தானதாக இருக்கலாம். சூரிய ஒளியில் நீண்ட நேரம் நிறுத்தப்படும் வாகனங்களை குழந்தைகள் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×