search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திண்டுக்கல் அருகே இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி
    X

    இறந்த கோவில் காளை

    திண்டுக்கல் அருகே இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி

    • காளையை சாத்தம்பாடி கிராம மக்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக வளர்த்து பராமரித்து வந்தனர்.
    • ஊர் மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்தால் என்னென்ன சடங்குகள் செய்வார்களோ அதனை செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தில் வீரமுடையார் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று ஊர் மக்கள் சார்பில் வளர்க்கப்பட்டு வந்தது.

    இந்த காளை திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றதுடன் ஊருக்கும் பெருமை சேர்த்து வந்தது. இதனால் அந்த காளையை சாத்தம்பாடி கிராம மக்கள் தங்கள் வீட்டு பிள்ளையாக வளர்த்து பராமரித்து வந்தனர்.

    திருவிழா காலங்களில் இந்த காளைக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக கோவில் காளை நோய்வாய்பட்டு இருந்தது. நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.

    இதனையடுத்து அந்த ஊர் மக்கள் காளைக்கு தங்கள் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்கினர். ஊர் மந்தையில் காளை வைக்கப்பட்டு அதற்கு மாலைகள், வேட்டி துண்டுகள் அணிவித்தும், சந்தனம், ஜவ்வாது பூசியும் வழிபட்டனர்.

    அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க காளை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வாண வேடிக்கையுடன் கோவில் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு ஊர் மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்தால் என்னென்ன சடங்குகள் செய்வார்களோ அதனை செய்தனர்.

    Next Story
    ×