search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராக்கெட்டில் இருக்கும் மனிதர்கள் தப்பிக்க உதவும் "க்ரூ எஸ்கேப் சிஸ்டம்": செயல்படும் முறை பற்றி நாளை பரிசோதனை

    • மனிதர்களை 400 கிலோ மீட்டர் உயரத்திற்கு விண்வெளிக்கு அழைத்து சென்று பாதுகாப்பாக திரும்பி அழைத்து வருவது தான் ககன்யான் திட்டம் ஆகும்.
    • ராக்கெட்டில் மனிதர்களை அழைத்து செல்லக்கூடிய ஆர்பிட்டர் மாடியுலில், க்ரூ மாடியுல் என 2 பிரிவுகள் இருக்கும்.

    உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்றாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உள்ளது. விண்வெளி தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும், அவற்றை நாட்டு நலனுக்காக பயன்படுத்துவதே இஸ்ரோவின் நோக்கம் ஆகும்.

    இதனால் இஸ்ரோ தொடங்கப்பட்ட நாளில் இருந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. ஏவுகலங்கள் மூலம் பல தொலைதொடர்பு செயற்கை கோள்களையும், புவி கூர்நோக்கு செயற்கை கோள்களையும் இதுவரை இஸ்ரோ ஏவி உள்ளது.

    அதன் உச்சக்கட்டமாக நிலவை நோக்கி இந்தியாவின் முதல் பயணமாக 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 ஏவப்பட்டது. சமீபத்தில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது. அது தனது ஆய்வை நிலவில் மேற்கொண்டு வருகிறது.

    இஸ்ரோவின் கனவு திட்டங்களில் ஒன்று விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம். இந்த திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. மனிதர்களை 400 கிலோ மீட்டர் உயரத்திற்கு விண்வெளிக்கு அழைத்து சென்று பாதுகாப்பாக திரும்பி அழைத்து வருவது தான் ககன்யான் திட்டம் ஆகும்.

    இதற்கான ராக்கெட்டை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இந்த ராக்கெட்டில் மனிதர்களை அழைத்து செல்லக்கூடிய ஆர்பிட்டர் மாடியுலில், க்ரூ மாடியுல் என 2 பிரிவுகள் இருக்கும். அவற்றில்தான் மனிதர்களை பாதுகாப்பாக அமர வைத்து அழைத்து செல்ல முடியும். ஆர்பிட்டர் மாடியுலில் புதிய தொழில்நுட்பத்தில் இது உருவாக்கப்படுகிறது.

    விண்ணுக்கு மனிதர்களை அழைத்து செல்லும் ராக்கெட்டில் ஏதாவது கோளாறு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதில் உள்ள மனிதர்களை பாதுகாப்பாக தரையிறங்க செய்ய க்ரூ எஸ்கேப் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. இது ராக்கெட்டில் சிறு ராக்கெட் போன்று பொருத்தக் கூடியதாகும்.

    விண்ணுக்கு செல்லும்போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறிய ராக்கெட் போன்ற அமைப்பு, பெரிய ராக்கெட்டில் இருந்து தனியாக பிரிந்து அதில் உள்ள பாராசூட்டுக்கள் மூலம் பூமிலோ, அல்லது கடலிலோ தரை இறங்கும்.

    இந்த க்ரூ எஸ்கேப் சிஸ்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான பரிசோதனை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ மையத்தில் நாளை (21-ந்தேதி) நடக்கிறது. இதற்காக டெஸ்ட் வெகிக்கிஸ் என்ற புதிய ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது.

    அந்த ராக்கெட்டின் மேல் பகுதியில் க்ரூ மாடியுல் பொருத்தப்பட்டிருக்கிறது. அதற்கு மேல் க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தை பொருத்தி சுமார் 12 கிலோ மீட்டர் தூரம் விண்ணில் கொண்டு செல்லப்படுகிறது. ராக்கெட் மேலே செல்லும்போது ஏதாவது ஒரு கோளாறை ஏற்படுத்தி க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தில் உள்ள மோட்டாரை இயக்கி தனியாக பிரிந்து செல்ல செய்யப்படும்.

    அது மேலும் 5 கிலோ மீட்டர் தூரம் மேலே சென்று க்ரூ மாடியுல் சிஸ்டமும், க்ரூ எஸ்கேப் சிஸ்டமும் தனித்தனியாக பிரியும். பின்பு க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தில் உள்ள 10 பாராசூட்டுக்கள் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடலுக்குள் இறக்கி பரிசோதனை செய்யப்படும்.

    1.) பரிசோதனை ராக்கெட் நாளை காலை 8 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படுகிறது.

    2.) ஏவப்பட்ட 61.01 வினாடியில் 11.09 கிலோ மீட்டர் தொலைவுக்கு ராக்கெட் சென்றிருக்கும் நிலையில் க்ரூ எஸ்கேப் சிஸ்டம் சோதனை ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்படும்.

    3.) 91.02 வினாடியில் 16.09 கிலோ மீட்டர் தொலைவிற்கு ராக்கெட் சென்றிருக்கும் நிலையில் மிஷன் ரத்து செய்யப்பட்டு குழு தொகுதியை வீழ்த்துவதற்கான செயல்முறை தொடங்கும்.

    4.) 95.05 வினாடியில் 16.08 கிலோ மீட்டர் உயரத்தில் க்ரூ மாடியுல் சிறிய பாரா சூட்டுக்கள் திறக்கும்.

    5.) 2.37 கிலோ மீட்டரில் 3 முக்கிய பாராசூட்டுக்கள் திறக்கப்படும். குழுவினர் வங்காள விரிகுடா கடலில் பாதுகாப்பாக தரை இறங்கும். ராக்கெட் ஏவப்பட்ட 8 நிமிடங்களில் சோதனை பணி நிறைவடையும்.

    6.) ராக்கெட்டின் பூஸ்டர் பகுதி நிலத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், க்ரூ எஸ்கேப் சிஸ்டம் 16 கிலோ மீட்டர் தூரம் கடலுக்குள்ளும் தரை இறங்கும். இந்த பரிசோதனை வெற்றி பெற்றால் ராக்கெட்டில் பயணிக்கக் கூடியவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

    Next Story
    ×