search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    1967-ல் தி.மு.க., 1977-ல் அ.தி.மு.க., 2026-ல் த.வெ.க.- விஜய்
    X

    1967-ல் தி.மு.க., 1977-ல் அ.தி.மு.க., 2026-ல் த.வெ.க.- விஜய்

    • தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அறிவித்துக் கொண்டு இருக்கிறோம்.
    • பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்றுவதுதான் நமது முதல் வேலை.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள ஓட்டலில் நடந்தது. விழாவில் விஜய்யின் பரிணாம வளர்ச்சி குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது.

    அதன் பிறகு 2-ம் ஆண்டு நிகழ்ச்சிகள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்றார். பின்னர் கட்சியின் கொள்கைப் பாடல் ஒலிக்கப்பட்டது.

    அதன் பிறகு உறுதிமொழி ஏற்கப்பட்டது. விஜய் உள்பட அனைவரும் நெஞ்சில் கை வைத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    பின்னர் கொள்கை தலைவர்களுக்கும், மொழிப்போர் தியாகிகளுக்கும் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு தளபதி பயிலக சிறார் பயனாளர்கள் மேடைக்கு வந்து பேசினார்கள். அவர்கள் விஜய்க்கு நன்றி தெரிவித்தனர். இதில் பேசிய 2 மாணவிகளுடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    கட்சியின் நிர்வாகிகள் சார்பாக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி பேசினார். தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளர் தஞ்சை ஆர்.விஜயசரவணன் கவிதை வாசித்தார்.

    விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதாவது:-

    என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்கள், தோழிகள் எல்லோருக்கும் என்னுடைய வணக்கம். இந்த அரசியல் என்றாலே வேறு லெவல்தான். அரசியலில் மட்டும்தான் வித்தியாசமான ஒன்றை நாம் பார்க்கலாம். யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள் என்றே நமக்கு தெரியாது. யார்-யாரை எப்போது ஆதரிப்பாளர்கள் என்றே நமக்கு தெரியாது. அதை கணிக்கவே முடியாது. அதனால்தான் அரசியலில் நிரந்தர நண்பனும், நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம்.

    அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அது ஜனநாயக உரிமை என்று சொல்வார்கள். ஆனால் மக்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்து போன ஒருவன் அரசியலுக்கு வருகிறான் என்றால் அதை கண்டிப்பாக நல்லவர்கள் எல்லோருமே வரவேற்பார்கள். ஆனால் ஒரு சில பேருக்கு மட்டும் எரிச்சல் வரத்தானே செய்யும். அது இருக்கும்தானே.



    என்னடா இவன் திடீரென்று ஒருவன் என்ட்ரி கொடுத்து விட்டானே. இதுவரை நாம் சொன்ன பொய்யை எல்லாம் நம்பிக் கொண்டு மக்கள் நமக்கு ஓட்டு போட்டுக் கொண்டு இருந்தார்களே. ஆனால் இப்போது இவன் சொல்வதையெல்லாம் பார்த்தால் மக்கள் மனசுக்கு ரொம்ப நெருக்கமாக வேறு இருக்குதே. அதுவே நமக்கு பெரிய நெருக்கடியாகவும் இருக்குதே. இவனை என்ன செய்யலாம். எப்படி இவனை குளோஸ் பண்ணலாம் என்று ஒரு குழப்பம் வரும். அந்த குழப்பத்தில் கத்துவதா? கதறுவதா? என்று என்ன பண்ணுவது என்று தெரியாமல் வருகிறவன் போகிறவன் எல்லாம் கட்சி ஆரம்பிறக்கிறான் என்று சொல்லி பேச ஆரம்பிப்பார்கள்.

    இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் நமக்கு எதிராக பேசுகிறார்கள். இல்லையா? அந்த மாதிரி.

    இப்படிப்பட்ட ஒரு அரசியல் களத்தில் கொஞ்சம் கூட ஒரு பயம் இல்லாமல், பதட்டம் இல்லாமல் வருகிற எதிர்ப்புகள் எல்லாவற்றையும் சும்மா இடது கையில் 'டீல்' செய்து கொண்டு தமிழக வெற்றிக் கழகம் முதல் ஆண்டை கடந்து இப்போது 2-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.

    இந்த ஒரு கால கட்டம்தான் மிகவும் முக்கியமான கால கட்டம். ஏனென்றால் ஒரு அரசியல் கட்சிக்கு பெரிய பலமே அந்த கட்டமைப்புதான். அதுதான் அந்த கட்சியின் வேர் மாதிரி, அடிப்படை பலமே அதுதான். ஒரு ஆலமரம் போல கட்சி வளர வேண்டும் என்றால் வேர்களும், விழுதுகளும் வலிமையாக இருக்க வேண்டும் அல்லவா? அப்படி நமது அமைப்பை பலப்படுத்தும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

    தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அறிவித்துக் கொண்டு இருக்கிறோம். இந்த நேரத்தில் நம் மீது ஒரு புகார். அது என்ன புகார் என்று எனக்கும் புரியவில்லை.

    நமது மாவட்ட நிர்வாகிகள் எல்லோருமே இளைஞர்களாகவே இருக்கிறார்களாம். இருந்தால் என்ன? அறிஞர் அண்ணா கட்சி ஆரம்பித்த போது அவர் பின்னாடி நின்றதும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த போது அவரது பின்னாடி நின்றதும் வெறும் இளைஞர்கள்தான். அந்த இளைஞர்களால்தான் 1967-ம் ஆண்டிலும், 1977-ம் ஆண்டிலும் நடந்த தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அதுதான் வரலாறு.

    அதே போல் 2026-ல் தமிழக வெற்றிக் கழகம் வரலாறு படைக்கும்.

    இப்போது அதே போல் நமது மீது இன்னொரு புகார். அது என்னவென்றால் நமது கட்சி நிர்வாகிகள் எல்லோருமே சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களாம். அதேதான் இங்கேயும் கேட்கிறேன். ஏன் வரக்கூடாதா? சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் பெரிசு பெரிசா சாதித்து இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் நம்ம கட்சி எளிய மக்களுக்கான கட்சி தானே அப்படி இருக்கும் போது நமது கட்சி நிர்வாகிகளும் எளிய குடும்பத்தை சேர்ந்தவர்களாத்தான் இருப்பார்கள். நமது கட்சி பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது.

    முன்பெல்லாம் அந்த காலத்தில் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். இப்போது உல்டா... மாறி விட்டது. பதவியில் இருப்பவர்கள் எல்லாம் பண்ணையாராக மாறி விடுகிறார்கள்.

    மக்களுடைய நலனை பற்றியோ, நாட்டின் நலனை பற்றியோ, வளர்ச்சிகளை பற்றியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் பணம் பணம் பணம். எந்தெந்த வழிகளில் எல்லாம் கொண்டு வரலாம் என்று நினைக்கிற பண்ணையார்களை அரசியலை விட்டே அகற்றுவதுதான் நமது முதல் வேலை.

    இவ்வாறு விஜய் பேசினார்.

    இந்த விழாவில் கட்சியின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கொள்கை பரப்பு இணை செயலாளர் ராஜ்மோகன் தொகுத்து வழங்கினார்.

    விழா நடைபெறும் பகுதியில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்ற 3 ஆயிரம் பேருக்கும் அறுசுவை மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் செய்திருந்தார்.

    ஆண்டு விழாவையொட்டி கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. விஜய் வீடு அமைந்துள்ள நீலாங்கரை முதல் விழா நடைபெறும் சொகுசு விடுதி வரை விஜய்யை வரவேற்று பதாகைகளும் வைக்கப்பட்டு இருந்தன.

    Next Story
    ×