search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை விமான நிலையத்தில் இருந்து 2 நாட்களில் 2 டன் கரும்புகள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி
    X

    கோவை விமான நிலையத்தில் இருந்து 2 நாட்களில் 2 டன் கரும்புகள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

    • அபுதாபிக்கு இயக்கப்படும் விமானத்தில் பெரிய அளவுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுவது இல்லை.
    • ஷார்ஜா செல்லும் விமானத்தில் பல வகையான பொருட்களும் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கோவை:

    கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக கோவை-ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்கள் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கோவை விமான நிலையத்தில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு முறையும் 3 டன்கள் வரை சரக்குகள் கையாளப்படுவது வழக்கம். மேலும் காய்கறிகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் முன்பதிவு செய்யப்படும்.

    இந்த நிலையில் நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஷார்ஜா செல்லும் விமானத்தில் கரும்புகளை கொண்டு செல்வதற்கான புக்கிங் பணிகள், கடந்த சில நாட்களாக மும்முரமாக நடைபெற்றன.

    இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் விமான சேவை வழங்கப்படும் போதும் ஒவ்வொரு முறையும் ஒரு டன் வீதம் மட்டுமே சரக்குகள் கையாளப்படுகிறது.

    அபுதாபிக்கு இயக்கப்படும் விமானத்தில் பெரிய அளவுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுவது இல்லை. ஷார்ஜா செல்லும் விமானத்தில் பல வகையான பொருட்களும் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றன.

    அதிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10, 11-ந்தேதி ஆகிய 2 நாட்களில் மட்டும் கோவை விமான நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 டன் கரும்புகள் புக்கிங் செய்யப்பட்டு, ஷார்ஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    கோவை விமான நிலையத்தில் தினமும் 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் கூட்டமும் அதிகரித்து உள்ளது.

    அதிலும் குறிப்பாக ஜனவரி 9-ந்தேதி மட்டும் உள்நாட்டு பிரிவில் 9893 பேரும், வெளிநாட்டுப்பிரிவில் இருந்து 1279 பேரும் என மொத்தம் 11,172 பேர் பயணித்து உள்ளனர். மேலும் அன்றைய தினம் 33 விமானங்கள் இயக்கப்பட்டன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×