என் மலர்
தமிழ்நாடு
அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரம் காலிப்பணியிடங்கள்- திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்
- 27 ஆயிரம் ஆசிரியர் மற்றும் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
- அங்கன்வாடி மையங்களில் நிலவும் ஆசிரியர் மற்றும் சமையலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
மழலைக் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியை கூட முறையாக வழங்க மறுக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 55 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரம் ஆசிரியர் மற்றும் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
மழலைக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் அடிப்படைக் கல்வியை வழங்கும் நோக்கத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் போதுமான ஆசிரியர்கள் மற்றும் சமையலர்களை நியமிக்க திமுக அரசு காட்டும் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் கண்டுகொள்ளாத திமுக அரசால், தற்போது ஒரே ஆசிரியர் இரண்டு அல்லது மூன்று அங்கன்வாடி மையங்களை கவனிக்கும் அளவிற்கு பணிச்சுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் இல்லாத அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் சமையலரே குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் நிலவுவதால் அவர்களுக்கான ஊட்டச்சத்து உணவை உரிய நேரத்தில் வழங்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
எனவே, அங்கன்வாடி மையங்களில் நிலவும் ஆசிரியர் மற்றும் சமையலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, மழலைக் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படைக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து உணவு முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
என அறிக்கையில் தினகரன் கூறினார்.