என் மலர்
தமிழ்நாடு
தமிழகம் முழுவதும் 320 வகையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன- சுகாதாரத்துறை இயக்குனர்
- சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் மெட்பார்மின் மாத்திரைகள் 11 கோடிக்கும் அதிகமாக உள்ளன.
- எந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், எத்தனை மருந்துகள் உள்ளன என்பதை சென்னையில் இருந்தே பார்க்க இயலும்.
சென்னை:
குளிர் மற்றும் மழை காலங்களில் டெங்கு, இன்புளூயன்சா, எச்.எம்.பி. வைரஸ் தொற்று உள்ளிட்டவை வேகமாக பரவும். வெப்ப நிலை அதிகமாக இருக்கும் போது சின்னம்மை, பொன்னுக்கு விங்கி, அக்கி போன்ற பாதிப்புகள் பரவுவது வழக்கம்.
கடந்த இரு ஆண்டுகளாக இந்த கால பருவ நிலைமாறி அனைத்து கால சூழல்களி லும் அனைத்து விதமான தொற்றுகளும் பரவுகின்றன. குறிப்பாக குளிர் மற்றும் மழைக் காலங்களில் அம்மை பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. அதே போன்று மாசுபட்ட நீர் மற்றும் உணவு மூலம் பரவும் டைபாய்டு காய்ச்சல் கோடை காலங்களிலும் பதிவாகிறது.
இதையடுத்து பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான எதிர்ப்பு மருந்துகள் உள்பட 320 மருந்துகளை போதிய எண்ணிக்கையில் தொடர்ந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது:-
தமிழகத்தில் 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல், சளி மருந்துகளில் இருந்து உயிர் காக்கும் உயர் மருந்துகள் வரை அனைத்துமே இருப்பில் உள்ளன. இதைத் தவிர 13 வகையான தடுப்பூசிகளும் தேவைக்கேற்ப கையிருப்பில் உள்ளன.
ரேபிஸ் தடுப்பூசிகள் மட்டும் 1.08 லட்சம் குப்பிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போதுள்ளன. இதைத் தவிர பாம்பு கடிக்கான மருந்துகள் 21 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கின்றன.
சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படும் மெட்பார்மின் மாத்திரைகள் 11 கோடிக்கும் அதிகமாக உள்ளன. இவை அனைத்தின் இருப்பும் குறையும்போது அதுகுறித்த விவரங்களை டி.டி.எம்.எஸ். எனப்படும் மருந்து விநியோக மேலாண்மை தளத்தில் எங்களால் கண்காணிக்க முடியும். எந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், எத்தனை மருந்துகள் உள்ளன என்பதை சென்னையில் இருந்தே பார்க்க இயலும். இதன் வாயிலாக மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அவற்றின் இருப்பை உடனுக்குடன் உறுதி செய்து வருகிறோம். எந்த பருவத்தில் எத்தகைய நோய் பரவினாலும், அதனை எதிர்கொள்வதற்கான மருந்து கையிருப்பும், சிகிச்சை கட்டமைப்பும் நம்மிடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.