search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    4 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு
    X

    4 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு

    • செங்கல் சூளைகளுக்கான செம்மண் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.
    • அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனை நடத்தப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 49). இவர் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். மேலும் செங்கல் சூளைகளுக்கான செம்மண் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 18-ந் தேதி காலை மதுரையை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 15 பேர் 6 கார்களில் செந்தில்குமார் வீட்டில் சோதனை நடத்துவதற்காக வந்தனர். வீட்டின் பிரதான நுழைவு வாயிலை பூட்டிய அதிகாரிகள் வீட்டில் இருந்தவர்கள் வெளியேறவும், உள்ளே நுழையும் வெளி நபர்களையும் சோதனையிட்டனர்.

    இந்த வீட்டின் அருகில் இருந்த அலுவலகம், விருந்தினர் ஓய்வு இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி கனியாவதி ஆகிய குடும்பத்தினர் மட்டும் வீட்டில் இருந்தனர்.

    கடந்த 4 நாட்களாக நடந்த சோதனை இன்று அதிகாலை நிறைவு பெற்றது. சோதனையின் போது செந்தில் குமாரின் பங்களா அருகில் ஒரு பாழடைந்த வீடு இருந்தது குறித்து அதிகாரிகள் கேட்டனர். அதில் பழைய பொருட்கள் இருப்பதாக அவர் கூறினார். அந்த அறையின் சாவியை கேட்டபோது, அது தொலைந்து போய் விட்டதாக தெரிவித்தார். இதனால் கடப்பாறையை எடுத்து வரச்சொல்லி அந்த அறையை உடைத்து பார்த்தனர். அப்போது அந்த வீட்டுக்குள் சொத்து தொடர்பாக முக்கிய ஆவணங்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் கணக்கில் வராத நகைகள் மற்றும் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரிய வரவே அதனையும் கைப்பற்றினர்.

    செந்தில்குமாரின் உறவினர்களான குழந்தைவேல் மற்றும் இவரது தம்பி முருகன் ஆகியோர் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில் நகைக்கடை வைத்து நடத்தி வருகின்றனர். ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் இவர்களுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கும் இயங்கி வருகிறது. இந்நிலையில் செந்தில்குமாரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில் குழந்தைவேல், முருகன் ஆகியோருக்கு சொந்தமான நகைக்கடை, பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறையால் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் 6 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். குழந்தைவேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடுமலைப்பேட்டை ரோட்டில் 4 ஏக்கர் பரப்பளவில் புதிய வீட்டு மனை ஒன்றை உருவாக்கினார். இதற்காக 1000 கிடாய்களை வெட்டி மாபெரும் விருந்து வழங்கப்பட்டது. அப்போது இருந்தே இவருக்கு போட்டியாக தொழில் நடத்தி வருபவர்கள் இவர் மீது அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன் பேரில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

    இது தவிர பைனான்ஸ் அதிபர் செந்தில்குமார் பா.ஜ.க. மாநில நிர்வாகிக்கு நெருக்கமானவர். இதனால் அரசியல் காரணங்களுக்காக இந்த சோதனை நடத்தப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 4 நாட்களாக ஒட்டன்சத்திரம் மற்றும் சத்திரப்பட்டியில் நடந்த வருமான வரித்துறை சோதனை முடிவுக்கு வந்துள்ளதால் அதன் பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது.

    Next Story
    ×