என் மலர்
தமிழ்நாடு

கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம்: முதலமைச்சர் அறிவிப்பு

- எதிர்பாராத விதமாக மின்கம்பம் மீது ஏணி உரசியதில் மின்சாரம் பாய்ந்தது.
- இச்சம்பவத்தில் 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டம் இணையம்புத்தன்துறை கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலய விழாவை முன்னிட்டு பெரிய அளவில் அலங்கார வளைவு அமைக்கும் பணி நடந்தது. அப்போது, சிலர் இரும்பு ஏணியை தூக்கிக் கொண்டு சென்றனர். அந்த ஏணி எதிர்பாராத விதமாக மின்கம்பம் மீது உரசிய நிலையில், ஏணியில் மின்சாரம் பாய்ந்தது.
இந்தச் சம்பவத்தில் 4 பேர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இனயம்புத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலய வருடாந்திர திருவிழா நடந்துவரும் நிலையில் இன்று (1.3.2025) மாலை நடைபெற்ற தேர் பவனியில் அலங்காரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணியை சாலையின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற முயன்றபோது எதிர்பாரா விதமாக மின்சாரம் தாக்கி, இனயம்புத்தன்துறையைச் சேர்ந்த விஜயன் (52) த/பெ. தனிஸ்லாஸ், சோபன் (45) த/பெ. பெர்னின், மனு (42) த/பெ. ஒஸ்மான் மற்றும் ஜெஸ்டிஸ் த/பெ. விக்டர் (35) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.