என் மலர்
தமிழ்நாடு
நெல்லை நீதிமன்ற வாசலில் வாலிபர் கொலை- 6 பேர் கைது
- கோர்ட்டு முன்பு உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
- கொலைக்கு பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி என்ற பல்லு மாயாண்டி (வயது 28).
இவரது தந்தை மணி பால் வியாபாரம் மற்றும் பந்தல் கட்டும் தொழில் செய்து வந்தார். மாயாண்டி தனது தந்தைக்கு உதவி செய்து வந்ததோடு, கூலி வேலைக்கும் சென்று வந்தார்.
மாயாண்டி மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இதில் ஒரு வழக்கில் ஆஜராவதற்காக மாயாண்டி இன்று காலை நெல்லை மாவட்ட நீதிமன்றத்துக்கு தனது தம்பி மாரிச்செல்வத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
இவர்கள் கே.டி.சி. நகர்-திருச்செந்தூர் ரோட்டில் கோர்ட்டு முன்பு வந்தனர். அப்போது காரில் ஒரு மர்மகும்பல் வந்தது. அதில் இருந்து இறங்கிய ஒருவர் மாயாண்டியை நோக்கி அரிவாளால் வெட்டுவதற்காக ஓடி வந்தார்.
இதைப்பார்த்த மாயாண்டியும், மாரிச்செல்வமும் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு ஆளுக்கொரு திசையில் ஓட்டம் பிடித்தனர். உடனே காரில் இருந்து இறங்கிய மேலும் 3 பேர் சேர்ந்து மாயாண்டியை விரட்டினர்.
அந்த கும்பல் கோர்ட்டு முன்பு மாயாண்டியை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. மாயாண்டியின் கை மணிக்கட்டை துண்டாக்கிய கும்பல், கால் மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டியதோடு தலையையும் சிதைத்தது.
இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மாயாண்டி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
உடனே கொலையாளிகள் காரில் ஏறி தப்ப முயன்றனர். அப்போது அங்கு நின்ற ஒரு வக்கீல், ஒரு போலீஸ்காரர் சேர்ந்து, கும்பலில் இருந்த ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். மற்ற கொலையாளிகள் காரில் ஏறி தப்பிச்சென்றனர்.
கோர்ட்டு முன்பு ஏராளமான வக்கீல்கள், போலீசார் மற்றும் பொது மக்கள் திரண்டிருந்த நிலையில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்துக்கு மாநகர போலீஸ் கமிஷனர் ரூபேஷ்குமார் மீனா, கிழக்கு மண்டல துணை கமிஷனர் விஜயகுமார், பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
அவர்கள் மாயாண்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கொலை செய்யப்பட்ட மாயாண்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் ராஜாமணி (33) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மாயாண்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக பிடிபட்ட கீழநத்தம் இந்திரா காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற வாலிபரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கொலை நடந்த சமயத்தில் கோர்ட்டு முன்பு ஏராளமான போலீசார் இருந்தும் குற்றவாளிகள் தப்பிச்சென்ற போது அவர்களை பிடிக்க முடியாமல் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர்.
இதைத்தொடர்ந்து வக்கீல்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதற்கிடையே கோர்ட்டு முன்பு உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கொலை கும்பல் கேரள பதிவெண் கொண்ட ஒரு காரில் வந்து கொலை செய்ததும், அந்த காரிலேயே தப்பிச்சென்றதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து காரின் அடையாளத்தை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
இதன் பயனாக கொலையில் தொடர்புடைய 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமகிருஷ்ணன், சுரேஷ், மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், சிவா, தங்க மகேஷ், மனோ ராஜ் ஆகியோரும் கைதாகி உள்ளனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய கேரளா பதிவு எண் கொண்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.