என் மலர்
தமிழ்நாடு

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை பாய்கிறது- மாநகராட்சி அதிரடி முடிவு

- பாரிமுனை, சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
- தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது
சென்னை:
தொழில் நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகை தமிழில் பெரிதாக வைக்க வேண்டும். அதற்கு அடுத்த அளவில் ஆங்கிலத்திலும் அதற்கும் குறைந்த அளவில் விருப்பமுள்ள பிற மொழிகளில் வைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். இதனை பெரும்பாலானவர்கள் பின்பற்றாமல் தமிழ் எழுத்துக்களை சிறியதாகவும், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை பெரிதாக எழுதி உள்ள பலகைகள் சென்னையில் பல பகுதிகளில் காணப்படுகிறது. கடைகளின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் சிறிய அளவில் போடப்பட்டும், பிற மொழிகளில் பெரிதாகவும் வைக்கப்பட்டு இருப்பது குறித்து புகார்கள் மாநகராட்சிக்கு வந்தன.
சென்னை மாநகராட்சியில் 70 ஆயிரம் கடைகள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பாரிமுனை, சவுகார்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டு
உள்ளது. 7 நாட்களுக்குள் சரி செய்யவில்லை என்றால் அந்த கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தமிழில் பெயர் பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என்பதையும் அதை முறையாக பின்பற்றாத கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்க கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.
சென்னை மாநகராட்சியில் இதற்கான கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மாநகராட்சி கவுன்சிலர்களும் தங்கள் பகுதியில் உள்ள கடைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.