என் மலர்
தமிழ்நாடு

வேளாண் பட்ஜெட்: பருத்தி உற்பத்தி பெருக்குத் திட்டத்திற்கு ரூ.12.21 கோடி ஒதுக்கீடு

- பருத்தி சாகுபடி திட்டம் 2021-2022-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- 2025-2026-ம் ஆண்டில் 35 லட்சம் ஏக்கரிலான பயிர்களை காப்பீடு செய்யும் வகையில், ரூ.841 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாட்டில் பருத்தியின் தேவை அதிகரித்துள்ளதால் பருத்தி உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க பருத்தி சாகுபடி திட்டம் 2021-2022-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-2026-ம் ஆண்டிலும் "பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம்" ரூ.12 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இயற்கைச் சீற்றங்களால் விளையும் பயிர் சேதங்களினால் ஏற்படும் வருவாய் இழப்புகளில் இருந்து பாதுகாத்து, உழவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2025-2026-ம் ஆண்டில் 35 லட்சம் ஏக்கரிலான பயிர்களை காப்பீடு செய்யும் வகையில், ரூ.841 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.