search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பனையூரில் 3-வது நாளாக மாவட்டச் செயலாளர்களுடன் அன்புமணி ஆலோசனை
    X

    பனையூரில் 3-வது நாளாக மாவட்டச் செயலாளர்களுடன் அன்புமணி ஆலோசனை

    • விருப்பம் இல்லை என்றால் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளலாம் என ராமதாஸ் கூறினார்.
    • தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ், அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    புத்தாண்டையொட்டி புதுச்சேரியில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கௌரவ தலைவர் ஜிகே மணி ஆகியோர் கலந்து கொண்ட நிலையில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டமன்றத் தேர்தலில் அன்புமணிக்கு உதவ முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமனம் செய்வதாக அறிவித்தார். அப்போது அருகில் இருந்த அன்புமணி குறுக்கிட்டு மறுப்பு தெரிவித்தார்.

    இதனால் கோபமடைந்த ராமதாஸ், தான் ஆரம்பித்த கட்சி பாமக என்றும், தாம் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்றும் கூறினார். அப்போது தொண்டர்கள் சிலர், முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு, "இது தன் கட்சி" என அழுத்தம் திருத்தமாகக் கூறிய ராமதாஸ், விருப்பம் இல்லை என்றால் யாராக இருந்தாலும் விலகிக் கொள்ளலாம் என்றார்.

    இதனால் அதிருப்தி அடைந்த அன்புமணி, பனையூரில் தான் தனியாக அலுவலகம் தொடங்கி இருப்பதாகக் கூறிவிட்டு மைக்கை தூக்கி எறிந்தார். தொடர்ந்து ஏராளமான தொண்டர்கள் சூழ பொதுக்குழுவில் இருந்து அன்புமணி ராமதாஸ் வெளியேறி நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ், அன்புமணி இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் சென்னை பனையூரில் உள்ள பா.ம.க. அலுவலகத்தில் அன்புமணி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இன்று 3-வது நாளாக மாவட்டச் செயலாளர்களுடன் பனையூரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து அன்புமணியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து தகவல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×