என் மலர்
தமிழ்நாடு
அண்ணா பல்கலை. வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
- அண்ணா பல்கலை. விவகாரத்தில் FIR லீக் ஆனது முழுக்க அரசின் தவறு
- மாநில அரசின் தலையீடற்ற, முறையான சிபிஐ விசாரணையே நீதியை வெளிக்கொணரும்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை வருகிற 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணா பல்கலை. வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "அண்ணா பல்கலை. வளாக பாலியல் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரித்து வரும் நிலையில், பத்திரிகையாளர்கள் பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளதாக செய்திகள் வருகின்றன.
பத்திரிகையாளர்கள் போன்களைப் பறிமுதல் செய்யவேண்டிய அவசியம் என்ன? FIR லீக் ஆனது முழுக்க அரசின் தவறு. அதனை பத்திரிகையாளர்கள் பக்கம் திசைதிருப்ப முயல்வது கண்டிக்கத்தக்கது.
உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டாலும், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் என்பதால், ஸ்டாலின் மாடல் அரசு இவ்வழக்கில் ஏதேனும் அழுத்தம் தருகிறதோ என சந்தேகம் எழுகிறது ,
யார் அந்த SIR என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், மாநில அரசின் தலையீடற்ற , முறையான CBI விசாரணையே நீதியை வெளிக்கொணரும்!
யார் அந்த SIR என்று கண்டறிய இந்த வழக்கை உடனடியாக CBI-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.