என் மலர்
தமிழ்நாடு
தமிழகத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன- அண்ணாமலை
- சாட்டையில் அடிப்பது என்பது தமிழர் மரபில் நடப்பது தான்.
- நான் லண்டன் சென்று வந்த பிறகு இன்னும் நல்லவனாகி இருக்கிறேன்.
கோவை:
சாட்டையடி போராட்டத்துக்கு பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்துள்ளார். முதலில் அவருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம். நாட்டின் புதிய பொருளாதார கொள்கைகளை கொண்டு வந்தவர் மன்மோகன் சிங். அவர் நாட்டிற்கு வகுத்து கொடுத்த பொருளாதார கொள்கைகளை வருகின்ற நாட்களில் நாங்கள் எப்போதும் நன்றியுடன் நினைவு கூர்வோம்.
இன்றைக்கு எடுத்துள்ள இந்த போராட்டம் வருகிற காலத்தில் தீவிரப்படுத்தப்படும்.
இது ஒரு தனி மனிதனை சார்ந்தோ, தனி மனிதனுக்கு ஆட்சியாளர்கள் மீது கோபத்தை காட்டவோ இந்த போராட்டம் கிடையாது. கண் முன்னால் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருக்கிறது. அதனை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் கல்வியின் தரம் குறைந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரம் பின்தங்கி செல்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீது தொடுக்கப்படும் குற்றச்செயல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துள்ளது.
இன்று தவ வேள்வியாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். எதற்காக சாட்டையடி. எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. முருகப்பெருமானிடம் வேண்டுதலாக இந்த சாட்டையடியை நான் சமர்ப்பிக்கிறேன். விரதம் இருக்க போகிறோம். அரசியல் பணி மேற்கொள்ள போகிறோம். ஆண்டவனிடம் முறையிட போகிறோம்.
தி.மு.க.வின் 3 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே கிடைக்கிற அனைத்து மேடைகளிலும் தி.மு.க.வை தோலுரித்து காட்ட போகிறேன். சென்னையில் நடந்த சம்பவம் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இது எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. எல்லாவற்றையும் யோசித்து முடிவுக்கு வந்துள்ளேன். தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை நான் காலணி அணிய போவதில்லை. தமிழக மக்களுக்காக இதை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் செய்து கொண்டிருக்கிறேன்.
பா.ஜ.க தொண்டர்கள் களத்திற்கு சென்று தீவிர களப்பணியாற்ற வேண்டும். இன்று போராட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தோம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை அடுத்து எங்களது போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம். புதிய தேதியை பின்னர் அறிவிப்போம்.
நம்முடைய மண்ணில் உடலை வருத்தி செய்யும்போது, அதற்கான உரிய பலன் நமக்கு கிடைக்கும். சமுதாயத்தில் ஏற்படக்கூடிய எல்லாத்துக்கும் சேர்த்தே சாட்டையடி அடித்து கொண்டேன்.
தி.மு.க. ஆட்சியில் பல்வேறு தவறான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் அறவழியில் கூட போராட முடியவில்லை. போலீசாரின் நடவடிக்கையால் பெண் திருப்தியாக இருப்பதாக போலீஸ் கமிஷனர் கூறியது மிகவும் தவறு. இன்னல்களை சந்தித்த பெண் எப்படி திருப்தியா இருக்க முடியும்?.
ஒரு விஷயத்தை சாதாரணமாக கடந்து போக போலீசார் முயற்சி செய்கிறார்கள். எப்.ஐ.ஆர். மூலம் இளம்பெண்ணின் வாழ்க்கையையே நாசம் செய்து விட்டனர். நான் போலீஸ் துறையை குறை சொல்பவன் அல்ல. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. காக்கியின் மீது தான் என் கோபம். எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்போது காவல்துறையை சீர்படுத்துவோம்.
சாட்டையில் அடிப்பது என்பது தமிழர் மரபில் நடப்பது தான். அதனை தான் நானும் செய்தேன். ஆண்டவனுக்கு இந்த சாட்டையடியை சமர்ப்பித்துள்ளேன். பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் இதனை செய்ய மாட்டார்கள். பா.ஜ.க.வினர் அறவழியில் போராட வேண்டும். எல்லா அரசியல் பதவிகளுமே வெங்காய பதவிகள் தான்.
வருகிற 2026 தேர்தலில் போட்டியிடுகிறேன். தோல்வியடைந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வேன். அதனை பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். வெற்றி தோல்வி என்பது சகஜம். மக்களின் மீது மட்டுமே நம்பிக்கை வேறு யாரும் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
நான் லண்டன் சென்று வந்த பிறகு இன்னும் நல்லவனாகி இருக்கிறேன். எனது அரசியல் தெளிவாக உள்ளது. லண்டனில் அரசியல் படிப்பு படித்த பிறகு எனக்கு அரசியல் சார்ந்த புரிதல் கிடைத்துள்ளது. நான் காலணியை கழற்றிய பின்பு முதலில் சென்றது தேவாலயம் தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.