search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மயக்கும் குரலில் இனிக்கப் பேசி இளைஞர்களை சீரழிக்கும் செயலிகள்- கடிவாளம் வருமா?
    X

    மயக்கும் குரலில் இனிக்கப் பேசி இளைஞர்களை சீரழிக்கும் செயலிகள்- கடிவாளம் வருமா?

    • இன்றைய இளைய தலைமுறையினரில் பலர் மேலை நாட்டு மோகத்தில் சிக்கி வருகிறார்கள்.
    • சபல எண்ணம் ஏற்படும் இளைஞர்கள் இந்த ‘ஆப்'பை டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்து அடிமையாகி பணத்தை இழக்கிறார்கள்.

    சென்னை:

    தொழில்நுட்ப வளர்ச்சியின் புரட்சியால் அனைவரது கைகளிலும் செல்போன்கள் தவழ்கின்றன. விரல் நுனியில் உலகம் என்று சொல்லும் அளவு கையடக்க செல்போனில் புதுபுது 'ஆப்'கள் (செயலி) உருவாகி வருகின்றன. வங்கி, வணிகம், பயண டிக்கெட் உள்பட பல்வேறு சேவைகளை செயலிகள் எளிதாக்கி விட்டன. இதுபோன்ற பயனுள்ள செயலிகள் மத்தியில் கலாசார சீரழிவுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பது போன்று பல்வேறு செயலிகளும் ஆக்கிரமித்து வருகின்றன.

    இன்றைய இளைய தலைமுறையினரில் பலர் மேலை நாட்டு மோகத்தில் சிக்கி வருகிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கில் 'டேட்டிங்' செயலிகள் பல்வேறு வடிவத்தில் சமூக வலைத்தளத்தை வசப்படுத்தி வருகிறது. கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் இளைஞர்களை மோக வலையில் விழவைத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஆண் விபசாரம் என்ற மோசமான கலாசாரமும் பரவி வருகிறது. சமீபத்தில் சென்னையில் 'டேட்டிங்' செயலி மூலம் ஆண் ஒருவரை உல்லாசத்துக்கு அழைத்து இளம்பெண் ஒருவர் நகையை பறிகொடுத்து, போலீசில் புகார் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    செல்போனில் 'முகநூல்' (பேஸ்-புக்) பக்கத்துக்குள் நுழைந்தால், கலாசார சீரழிவு செயலியின் விளம்பரங்கள் கவர்ந்து இழுக்கின்றன. இந்த விளம்பரத்தில் வரும் மாடல் பெண்கள், 'நீங்கள் தனியாக இருக்கிறீர்களா?, உங்கள் 'சிங்கிள்' வாழ்க்கை போர் அடிக்கிறதா?, அப்ப, நம்ம தமிழ் பசங்களுக்காக உருவாக்கப்பட்ட 'ஆப்'பை 9 ரூபாய்க்கு 'ரீசார்ஜ்' செய்து டவுன்லோடு செய்யுங்கள். ஜாலியாக பேசுங்கள், அரட்டை அடியுங்கள்' என்று ஆண்களுக்கு தூண்டில் விடுகிறார்கள். சட்டென்று சபல எண்ணம் ஏற்படும் இளைஞர்கள் இந்த 'ஆப்'பை டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்து அடிமையாகி பணத்தை இழக்கிறார்கள்.

    கலாசார சீரழிவு செயலிகளுக்கு கடிவாளம் போடப்படாததால், இதுபோன்ற செயலிகள் புற்றீசல் போல் பெருக தொடங்கி உள்ளன. இந்த செயலியை எப்படி பதவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்? என்று சில யூடியூப்பர்கள் பாடம் நடத்துவது கலாசார சீரழிவின் உச்சமாக இருக்கிறது.

    வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் சிலர் கவர்ச்சியான உடை அணிந்து, வீட்டு வேலைகள் செய்வது போன்ற வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் உலாவ விட்டு பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து பணம் பார்க்கிறார்கள். அதுபோன்ற கலாசாரம் தமிழ்நாட்டிலும் நுழைந்து விட்டது.

    முககவசம் அணிந்து, உடல் பாகங்கள் தெரியும்படி சேலையை கவர்ச்சியாக அணிந்து கொண்டு மயக்கும் குரலில் இனிக்க இனிக்க பேசி இளைஞர்களை மயங்கும் வகையில் தமிழ்பேசும் சில பெண்களின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. தன்னுடைய 'முகநூல்' கணக்கில் உறுப்பினரானால், அந்தரங்க புகைப்படங்களை பார்க்கலாம்' என்று இளைஞர்களை ஆபாச வலையில் வீழ்த்தி பணம் பறிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

    பாலியல் குற்ற சம்பவங்களுக்கும் இதுபோன்ற செயலிகள்தான் அடித்தளமாக அமைகின்றன என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. கலாசாரத்தை சீரழித்து, இளைய சமுதாயத்தை பாழ்படுத்தும் இதுபோன்ற 'ஆப்'களுக்கு (செயலி) 'ஆப்பு' வைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களின் எதிர்பார்ப்பாகவும், வேண்டுகோளாகவும், வலியுறுத்தலாகவும் இருக்கிறது.

    Next Story
    ×