search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்டசபை கேள்வி - பதில் நிகழ்வு : செங்கோட்டையன் IN - எடப்பாடி பழனிசாமி OUT
    X

    சட்டசபை கேள்வி - பதில் நிகழ்வு : செங்கோட்டையன் IN - எடப்பாடி பழனிசாமி OUT

    • கேள்வி நேரத்தில் தொகுதிக்கான கேள்வியை கேட்ட பின்னர் இருக்கையில் இருந்து செங்கோட்டையன் எழுந்து சென்றார்.
    • சட்டசபைக்கு செங்கோட்டையனும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஒன்றாகவே வந்துள்ளனர்.

    சட்டசபையில் கடந்த 4 ஆண்டுகளாக ராதாபுரம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு சபாநாயகராக பதவி வகித்து வருகிறார்.

    சபாநாயகர் அப்பாவுவை அந்த பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் (அ.தி.மு.க.) கடந்த ஜனவரி மாதம் கொடுத்துள்ளார்.

    தற்போது நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, அதாவது இன்று அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

    இந்நிலையில் சட்டசபை கூடியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, குணசீலன் மற்றும் மருத்துவர் செரியன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

    இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்றது.

    கேள்வி - பதில் நிகழ்வில் செங்கோட்டையன் கலந்துகொண்டார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை.

    கேள்வி நேரத்தில் தொகுதிக்கான கேள்வியை கேட்ட பின்னர் இருக்கையில் இருந்து செங்கோட்டையன் எழுந்து சென்றார்.

    அவையில் இருந்து செங்கோட்டையன் எழுந்து சென்றதையடுத்து, அ.தி.மு.க. கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது அவைக்கு செங்கோட்டையன் மீண்டும் வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொடுத்த 16 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களில் செங்கோட்டையனும் ஒருவர்.

    செங்கோட்டையனை சமாதானப்படுத்தும் முயற்சியில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, தளவாய் சுந்தரம் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

    முன்னதாக செங்கோட்டையன் வீட்டிற்கே சென்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சட்டசபைக்கு செங்கோட்டையனும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஒன்றாகவே வந்துள்ளனர்.

    Next Story
    ×