என் மலர்
தமிழ்நாடு
டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் ரத்து அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும்: அண்ணாமலை
- 4,981 ஏக்கர் மக்களுக்கு மகிழ்ச்சியான, அதிகாரப்பூர்வ செய்தி நாளை வரவிருக்கிறது.
- அமைச்சர் கிஷன் ரெட்டி பிரதமர் மோடியை சந்திக்கிறார். அதன்பின் அதிகாரப்பூர்வ செய்தி வர இருக்கிறது.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் அமைய இருப்பதாக தெரிவிக்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி விவசாயிகள் குழுவினர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது மத்திய இணைய அமைச்சர் எல். முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக விவசாயிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் நாங்கள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து சுரங்க திட்டத்தை நிறுத்தி வைத்தோம். விவசாயக்குழு தலைவர்கள் இன்று இரண்டு கோரிக்கைக்காக வந்திருந்தனர். ஒன்று நிறுத்தி வைத்ததற்கு நன்றி தெரிவிப்பதற்கு. மற்றொன்று முழுமையாக வரக்கூடாது, ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறத்துவதற்காக.
4,981 ஏக்கர் மக்களுக்கு மகிழ்ச்சியான, அதிகாரப்பூர்வ செய்தி நாளை வரவிருக்கிறது.
அமைச்சர் கிஷன் ரெட்டி பிரதமர் மோடியை சந்திக்கிறார். அதன்பின் அதிகாரப்பூர்வ செய்தி வர இருக்கிறது. இங்கு வந்திருந்த அனைத்து அம்பலக்காரர்களுக்கும் (விவசாயிகள் குழு தலைவர்கள், ஊர்த்தலைவர்கள்) அமைச்சர் உறுதி கொடுத்துவிட்டார். பாஜக மக்களுக்கு என்ன உறுதி மொழி கொடுத்திருக்கிறமோ? அதை நிறைவேற்றியிருக்கிறோம்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.