என் மலர்
தமிழ்நாடு
தூத்துக்குடியில் 5½ கிலோ கஞ்சாவுடன் அண்ணன்-தங்கை கைது
- நகர தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- தப்பி ஓடிய அண்ணாநகர் விக்கி மற்றும் பிரகாஷ் குறித்தும் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி நகர பகுதியில் மோட்டார் சைக்கிள் மூலம் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அவர்களை உடனடியாக கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நகர கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதன் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நகர தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயன்றவர்களை பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம் 5 கிலோ 700 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஒரு எடை எந்திரம் இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளுடன் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அவர்கள் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 8-வது தெருவை சேர்ந்த அற்புதராஜ் மகன் மைக்கேல் ராஜ் (வயது 30), அவரது தங்கை ஜெபா (27) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மைக்கேல் ராஜ் மீது புதுக்கோட்டை, தாளமுத்து நகர், தூத்துக்குடி வடபாகம், தெர்மல் நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் ஏராளமான கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதாகி இருப்பதும் தெரியவந்தது. அவர்களுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு தப்பி ஓடிய அண்ணாநகர் விக்கி மற்றும் பிரகாஷ் குறித்தும் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.