என் மலர்
தமிழ்நாடு
நீலகிரியில் அட்டகாசம் செய்த புல்லட் யானை கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டது

- கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த டாப் சிலிப் யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர்.
- புல்லட் ராஜா யானையை சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு சோதனை சாவடி வழியாக இரவோடு இரவாக கொண்டு சென்றனர்.
நெல்லை:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதத்தில் புல்லட் ராஜா என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வந்தது. அந்த 1 மாதத்தில் 48-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை புல்லட் யானை சேதப்படுத்தியது.
மேலும் குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை சாப்பிட்டு விட்டு விளைநிலங்களை சேதப்படுத்தியும் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தனர்.
கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் நீலகிரி, பொள்ளாச்சி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
சுமார் 75 பணியாளர்கள் கொண்ட வனக்குழுவினர் மற்றும் கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். கடந்த மாதம் 27-ந் தேதி சேரம்பாடி பகுதியில் புல்லட் யானை முகாமிட்டிருப்பதை அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று புல்லட் யானை மீது மயக்க ஊசியை செலுத்தி பிடித்தனர். பின்னர் அதனை கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த டாப் சிலிப் யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர்.
சுமார் 1 மாதம் அங்கு வைத்து யானை பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், அங்கிருந்து பாதுகாப்பான வனப்பகுதிக்கு கொண்டு சென்று யானை விடப்படும் என வனத்துறையினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் நேற்றிரவு முகாமில் இருந்து கனரக லாரியில் ஏற்றப்பட்ட புல்லட் யானை, சாலை மார்க்கமாக நெல்லையை வந்தடைந்தது.
தொடர்ந்து களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையிலான வனத்துறையினர் இந்த புல்லட் ராஜா யானையை சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு சோதனை சாவடி வழியாக இரவோடு இரவாக கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மாஞ்சோலை வழியாக கோதையாறு அடர் வனப்பகுதியில் இறக்கிவிட வனத்துறையினர் பத்திரமாக யானையை அழைத்து சென்றனர்.
யானை கொண்டு வரப்பட்டதையொட்டி, களக்காடு முண்டந்துறை புலிகள் அம்பாச முத்திரம்காப்பக துணை இயக்குனர்கள் இளையராஜா, ராமேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினர் யானை வரும் வழியில் எல்லாம் மின்சாரத்தை துண்டித்து மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். மேலும் நெல்லை வனத்துறை, மருத்துவ குழுவினரும் அவர்களுடன் செல்கின்றனர்.
ஏற்கனவே தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானையை கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கு விடப்பட்டது. தற்போது மேலும் ஒரு காட்டு யானையான புல்லட் யானை கோதையாறு பகுதியில் வனத்துறையினர் விட்டதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.
கோதையாறு அடர் வனப்பகுதியானது அகத்தியமலை யானைகள் காப்பகமாக ஏற்கனவே மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால், நேற்று இரவோடு இரவாக புல்லட் யானை அங்கு கொண்டு வரப்பட்டு அடர் வனப்பகுதியில் விடப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.