என் மலர்
தமிழ்நாடு

புறநகர் ரெயில்கள் ரத்து.. மெட்ரோ, பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம்

- மெட்ரோ, பஸ் நிலையங்களில் அதிகாலை முதலே பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
- தாம்பரம், கிண்டி, சென்டிரல், பிராட்வே உள்ளிட்ட பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டிற்கு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி சென்ன மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று தாம்பரத்தில் இருந்து பிராட்வேக்கு 25 பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து பிராட்வேக்கு 20 பஸ்கள் மற்றும் பல்லாவரம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு 5 பஸ்கள் என 50 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது.
இந்நிலையில், புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மெட்ரோ, பஸ் நிலையங்களில் அதிகாலை முதலே பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். கிண்டி, சென்ட்ரல் உள்பட அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் அதிகாலை முதலே பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
அதேபோல், தாம்பரம், கிண்டி, சென்டிரல், பிராட்வே உள்ளிட்ட பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.