என் மலர்
தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்காக ஒன்றுபட்டு போராடுவோம் - பிறந்தநாள் கோரிக்கை விடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

- கொள்கைகளை எடுத்துக் கூறும் பொதுக்கூட்டங்களை நடத்துவார்கள்.
- மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற மார்ச் 1-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை ஒட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கும், தி.மு.க. உடன்பிறப்புகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவில், "அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நான் என் பிறந்தநாளை பெரிய அளவில் ஆடம்பரமாக ஆர்ப்பாட்ட விழாவாக கொண்டாடுவதில்லை. ஆனால் கழக உடன்பிறப்புகள் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குவது, கழக அரசின் சாதனைகள் மற்றும் கழக கொள்கைகளை எடுத்துக் கூறும் பொதுக்கூட்டங்களை நடத்துவார்கள்.
இந்த முறை என் பிறந்தநாள் வேண்டுகோளாக என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு கோரிக்கையை முன்வைக்கிறேன். இன்று தமிழ்நாடு தனது உயிர்பிரச்சினையான மொழிப்போர் மற்றும் உரிமை பிரச்சினையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது. இதன் உண்மையான நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தொகுதி மறுசீரமைப்பு என்பது நம் மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, சமூகநல திட்டங்களை பெரிதும் பாதிக்கும். இதனை நீங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலத்தை காக்க எழுந்து நிற்க வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்கினோம். தற்போது கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவுக்குரல் வந்துள்ளது.
இதை பார்த்த ஒன்றிய அரசு இந்தியை திணிக்கவில்லை என்று கூறி அதற்கான முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறார்கள். மும்மொழி கொள்கையை ஏற்காததால் இன்றும் நமக்கான பணத்தை கொடுக்கவில்லை. அதேபோல் தமிழ்நாட்டுக்கான தொகுதிகளை குறைக்க மாட்டோம் என்று மட்டும் தான் சொல்கிறார்கள். ஆனால், மற்ற மாநிலங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என்று சொல்ல மறுக்கிறார்கள். நாம் கேட்பது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்காதீர்கள், நாட்டின் வளர்ச்சிக்காக மக்கள் தொகை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களை தண்டிக்காதீர்கள். அப்படி செய்தால் அதை தமிழ்நாடும், தி.மு.க.வும் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
நாம் ஒரு உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு நலனையும், எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டிற்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். நன்றி வணக்கம்," என்று கூறியுள்ளார்.