search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதுப்பிக்கப்பட்ட மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மரியாதை

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.
    • நிர்வாகிகள் பலர் மொழிப்போர் தியாகிகளுக்கும், தந்தை பெரியாருக்கும் வீர வணக்கம் என்று கோஷங்களை எழுப்பினார்கள்.

    சென்னை:

    இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து-நடராசன் ஆகியோரின் நினைவிடம் சென்னை மூலக்கொத்தளத்தில் அமைந்து உள்ளது.

    இந்த நினைவிடம் தமிழக அரசு சார்பில் ரூ.34 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 1,076 சதுர அடியில் 8 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ள நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    நினைவிட வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து-நடராசன் மற்றும் சமூகப்போராளி டாக்டர் எஸ்.தருமாம்பாள் அம்மையார் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்.பி., மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ.க்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஜே.ஜே. எபினேசர், பகுதி செயலாளர்கள் வ.பெ. சுரேஷ், ரா.செந்தில்குமார், ரா.லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன், சென்னை வடக்கு மாவட்ட அவை தலைவர் ஆர்.வெற்றிவீரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வே.சிவகுமார், ராயபுரம் மேற்கு பகுதி அவை தலைவர் எம்.கே. இஸ்மாயில், துணை செயலாளர் கு.ரமேஷ் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது நிர்வாகிகள் பலர் மொழிப்போர் தியாகிகளுக்கும், தந்தை பெரியாருக்கும் வீர வணக்கம் என்று கோஷங்களை எழுப்பினார்கள். மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் என்று கோஷம் எழுப்பினார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகையையொட்டி மூலக்கொத்தளம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசனுக்கு சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகை வளாகத்தில் சிலை நிறுவப்படும் என்று அறிவித்தார்.

    இதைத் தொடர்ந்து மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து-நடராசன் நினைவிடத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.

    Next Story
    ×