search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இபிஎஸ் குரல் பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்
    X

    இபிஎஸ் குரல் பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

    • ஒன்றிய அரசில் இருக்கிறவர்களுக்கு மனசாட்சி இருக்கா என்று கேட்க தோன்றுகிறது.
    • கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லை.

    சென்னை:

    'உங்களில் ஒருவன் பதில்கள்' மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    நீண்ட இடைவெளிக்குப்பிறகு 'உங்களில் ஒருவன் பதில்கள்' மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி... ஆரம்பிக்கலாமா....

    கே: தலைவர்- முதல்வர்... இப்போது 'அப்பா' என்று அழைக்கிறார்களே!

    ப: கட்சிக்காரர்கள் இயக்கத்திற்கு தலைவர் ஆனதும் தலைவர் என்று கூப்பிடுகிறார்கள். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதால் முதல்வர் என்று அழைக்கிறார்கள். இன்றைய இளைய தலைமுறைகள் என்னை அப்பா என்று அழைப்பதை கேட்கும் போது ஆனந்தமாக உள்ளது. காலப்போக்கில் மற்ற பொறுப்புகளுக்கு வேறு யாராவது வருவார்கள். ஆனா இந்த அப்பா என்று உறவு மாறாது. அந்த சொல் என்னுடைய பொறுப்புகளை இன்னும் கூட்டியிருக்கிறது என்று சொல்வேன். நான் இன்னும் தமிழ்நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்குன்னு எனக்கு உணர்த்துகிறது.

    கே: பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது?

    ப: தமிழ்நாட்டுக்கு இந்த பட்ஜெட்டால் என்ன நன்மை கிடைத்திருக்கிறது? தமிழ்நாட்டை புறக்கணிக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் இல்லை. பெயரை கூட சொல்வதில்லை. மாநிலங்களை ஒப்பிட்டு ஒன்றிய அரசு வெளியிடுகிற எல்லா புள்ளிவிவரங்களிலும் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது என அறிக்கை மட்டும் தருகிறார்கள். ஆனா பணம் மட்டும் தரமாட்டோம்ன்னு புரண்டு பிடிக்கிறார்கள். மாநில அரசின் நிதி வைத்து திட்டங்களை செயல்படுத்தணும்னு சொல்றாங்க. மாநில அரசின் நிதி வைத்து நாம் பல திட்டங்களை சிந்தித்து இருந்தாலும் ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு கிடைத்தால் தானே இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். நாம பசங்க படிக்கறதுக்க வேண்டியதற்கான நிதியை கூட கொடுக்கமாட்டேங்கறாங்கண்ணா என்ன அர்த்தம்? ஏற்கனவே கொடுத்துட்டு இருந்த நிதியையும் கொடுக்காமல் நிறுத்தினால் என்ன பண்றது? இப்படி ஒன்றிய அரசு தொடர்ந்து நம்மை வஞ்சித்துக்கொண்டே இருக்கு. நாமும் தொடர்ந்து போராடிக்கிட்டே இருக்கோம். இதுல நம்ம உரிமை கேட்குறதே அற்ப சிந்தனை என்று ஒன்றிய அமைச்சர் சொல்கிறார். ஒன்றிய அரசில் இருக்கிறவர்களுக்கு மனசாட்சி இருக்கா என்று கேட்க தோன்றுகிறது.

    கே: கல்வி... குறிப்பாக பெண்களுக்கான கல்வி குறித்து தொடர்ச்சியாகப் பேசுகிறீர்கள். திட்டங்களையும் அறிவிக்கிறீர்கள். இந்த 4 ஆண்டுகளில் என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்?

    ப: நாம் ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் இருந்து கல்விக்காக நிறைய செய்து கொண்டு இருக்கோம். கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து. ஒருவருடைய கல்வித்தான் அவருடைய தலைமுறையை முன்னேற்றி விடும் என்று சொல்லிக்கொண்டு இருக்கேன். அதனால் தான் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என்று நிறைய திட்டங்களை செய்கிறோம். குறிப்பாக பெண்களுக்கு கல்வி அறிவு கிடைக்கணும்னு ஏராளமான திட்டங்களை செய்து கொண்டு இருக்கிறோம். இதனால ஏராளமானவர்கள் பயன் அடைந்து இருக்கிறார்கள். பயன் அடைந்த பலர் பேசுகிற வீடியோக்களை நீங்களும் பார்த்து இருப்பீர்கள். இந்த திட்டங்களால் முன்னேறியவர்கள் எனக்கு கடிதம் எழுதுகிறார்கள். அதைப்போல நான் கொடுக்கிற அப்பாயிண்மெண்ட் ஆர்டர் பெரும்பாலும் பெண்களுக்காக இருக்கிறதை பார்த்து நான் பெருமை அடைகிறேன். கல்விக்காக இன்னும் நிறைய செய்யணும் நினைக்கிறேன்.

    கே: கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை எப்படி பார்க்கிறீர்கள்? முரண்கள் இருக்கின்றனவா?

    ப: கூட்டணி கட்சிகளின் கருத்துக்களை நான் ஆலோசனையாக தான் பார்க்கிறேன். முரண்பாடா நினைக்கிறது இல்லை. எல்லா இடத்திலும் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். கருத்து சொல்வது ஜனநாயகப்பூர்வமான உறவின் அடையாளம் தான். 2019-ல் இருந்து ஒன்றாக சேர்ந்து தேர்தல் களத்தை சந்தித்து வருகிறோம். பா.ஜ.க.வை எதிர்த்து வெற்றி பெறுவதில் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டா இருப்பது தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான். கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லை.

    கே: டெல்லி முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சம்மட்டி அடி என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்லியிருக்கிறாரே?

    ப: நான் ஏற்கனவே சொன்னது தான். பழனிசாமியின் அறிக்கையை பார்த்தால் பா.ஜ.க.வின் அறிக்கை மாதிரி தான் இருக்கும். அவருடைய குரலே பா.ஜ.க.வின் டப்பிங் குரல்தான். நாம கள்ளக்கூட்டணின்னு சொல்றத நிரூபிக்கிற பழனிசாமி அவ்வளவுதான். இதெல்லாம் பேசுறதுக்கு முன்னாடி அவர் தனது தோல்விகள் குறித்து யோசித்து பார்க்க வேண்டும்.

    கே: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகள் இப்போது அதிகம் வருகின்றதே!

    ப : பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து இருக்கிறோம். பாலியல் குற்றங்களுக்கு இன்னும் கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு சட்டமன்றத்தில் நானே சட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன். சிறப்பு நீதிமன்றங்களை கொண்டு வந்திருக்கிறோம். உடனடியாக தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறோம். பாலியல் குற்றங்களை செய்கிறவர்கள் அவங்க வீட்டில் இப்படி ஒரு குற்றம் நடந்தால் எப்படி எதிர்கொள்வார்கள் என்று நினைத்து பார்க்கணும்.

    கே: சோஷியல் மீடியாக்களில் வரும் கருத்துக்களை பார்ப்பீர்களா?

    ப: ஓய்வுநேரங்களில் பார்ப்பதுண்டு. செய்திகளை விட மக்களின் கருத்துக்கள் என்ன என்று பார்ப்பேன். தீயவற்றை விலக்கிட்டு நல்லதை எடுத்துப்பேன். யாராவது கோரிக்கை வைத்திருந்தால் அதை நியாயமான கோரிக்கையாக இருந்தால் அதை தீர்த்து வைக்கச் சொல்லி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பேன். பொதுவா சோஷியல் மீடியாக்களில் உணவு சம்பந்தப்பட்ட வீடியோக்கள் வருது. நிறைய பேர் ஓட்டல்களுக்கு போய் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கற மாதிரி Fitness-க்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.



    Next Story
    ×