என் மலர்
தமிழ்நாடு
பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னையும், கோவையும் உள்ளது.
- ஞானசேகரன் திமுக உறுப்பினர் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறேன்.
சென்னை:
தமிழக சட்டசபையின் 3-ம் நாள் நிகழ்வில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் இடையே விவாதம் நடைபெற்றது. இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
உண்மையான அக்கரையோடு சில உறுப்பினர்கள் பேசியுள்ளார்கள். அவையில் ஒருவர் மட்டும் அரசியல் ஆதாயத்திற்காக பேசினார். சென்னையில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மாபெரும் கொடூரம். பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்று நியாயம் பெற்று தருவதே அரசின் நோக்கம்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிக்கு உச்சபச்ச தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்யும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 80 சதவீதத்திற்கு மேல் தண்டனை பெற்று தந்துள்ளோம். பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னையும், கோவையும் உள்ளது.
மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் பொள்ளாச்சி சம்பவம் பற்றி எண்ணி பாருங்கள். பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொள்ளாச்சி சம்பவம் அதிமுக பிரமுகர்களால் நடந்தது என்பது சிபிஐ-யால் தெரியவந்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞானசேகரன் திமுக உறுப்பினர் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறேன் என்றார்.
பொள்ளாச்சி சம்பவம் குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பிய அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.