என் மலர்
தமிழ்நாடு
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது- முதலமைச்சர்
- தமிழகத்தில் 5300 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இரும்பு தொழில்நுட்பம் இருந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- பொருநை ஆற்றங்கரையில் 3200 ஆண்டுக்கு முன் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட சங்க கால செங்கல் கட்டுமானங்கள், உறை கிணறுகள், தொழிற்கூடப் பகுதிகள் ஆகியவற்றை பொதுமக்களும், எதிர்கால தலைமுறையினரும் நேரடியாக கண்டு உணரும் வகையில் கீழடி அகழாய்வுத் தளத்தில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் 4.48 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.
இந்த கட்டுமான பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மற்றும் கங்கை கொணட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இன்று காலை நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். விழாவில் கீழடி இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். தொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களையும் அவர் பார்வையிட்டார்.
இந்தியத் துணை கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் வெளியிட்டார்.
அதை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி நமது தமிழ்க்குடி என்று பெருமை பொங்க நாம் சொன்னபோது வெற்றுப் பெருமை பேசுகிறார்கள் என்று சிலர் விமர்சித்தார்கள். அதற்கு காரணம் தமிழ் சமுதாயத்தில் வந்து புகுந்த இழிவுகளும், அதனால் ஏற்பட்ட தேக்க நிலையும்தான் காரணம்.
இந்த இடைக்கால இழிவுகள் நீங்க, காலந்தோறும் எண்ணற்ற புரட்சியாளர்கள் தோன்றினார்கள். அய்யன் வள்ளுவர், வள்ளலார் தொடங்கி அயோத்தி தாசர் பண்டிதர் என அந்த பட்டியல் நீளமானது.
இந்த விழாவின் மூலம் முக்கியமான அறிவிப்பை வெளியிட போவதாக நேற்று சொல்லி இருந்தேன். பலரும் என்ன அறிவிப்பு என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு வருகிற வரை கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
தமிழர்களுடைய தொன்மையை உலகத்துக்கு சொல்கிற ஒரு மாபெரும் ஆய்வுப் பிரகடனத்தை இப்போது நான் அறிவிக்கிறேன்.
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கி இருக்கிறது. இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே மறுபடியும் சொல்கிறேன்.
தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வு பிரகடனத்தை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன்.
5,300 ஆண்டுகளுக்கு முன்னாடியே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது. இப்போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக் கணக்கீடுகள், இரும்பு அறிமுகம் ஆன காலத்தை கி.மு.4000 ஆண்டின் முதற்பகுதிக்கு கொண்டு சென்றிருக்கிறது.
தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னால் இரும்பு அறிமுகம் ஆகி இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். இதை ஆய்வின் முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகத்தோட தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புனே நகரில் உள்ள பீர்பால்சகானி தொல் அறிவியல் நிறுவனம், அகமதாபாத் நகரில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகிய தேசிய அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும், பன்னாட்டு அளவில் உயரிய நிறுவனமான அமெரிக்க நாட்டின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பீட்டா ஆய்வகத்துக்கும் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தேசிய நிறுனங்களில் ஓ.எஸ்.எல். பகுப்பாய்வுக்கும், பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க கால பகுப்பாய்வுக்கும் ஒரே தாழியில் இருந்து மாதிரிகளை அனுப்பி வைத்தோம். இப்படியான 3 நிறுவனங்களில் இருந்தும் ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரிகளை அனுப்பி, தரப்பட்ட முடிவுகளை கூர்ந்து, பகுப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைக்கிறது.
இப்போது கிடைத்துள்ள கதிரியக்க காலக் கணக்கீடுகள் மற்றும் ஓ.எஸ்.எல். பகுப்பாய்வு அடிப்படையில் கி.மு.3,345-ல் தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகம் ஆகிவிட்டது என்பது தெரிய வருகிறது. (அதற்கான ஆய்வு முடிவுகள் காண்பித்தார்).
இந்த பகுப்பாய்வு முடிவுகள், வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் இருக்கும் தொல்லியல் அறிஞர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் இரும்பின் தோற்றத்தையும் பண்டைய தொழில் நுட்பத்தைப் பற்றியும் ஆய்வு செய்துவரும் அறிஞர்கள். அந்த அறிஞர்கள் எல்லோரும் இந்த அவையில் கூடியிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒருசேர தமிழ்நாடு அரசையும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் ஆய்வு முன்னெடுப்புகளையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.
இவை எல்லாவற்றையும் தொகுத்துதான் 'இரும்பின் தொன்மை' என்ற நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.
அகழாய்வு செய்யப்பட்ட இடங்களில் இருக்கும் இரும்புப் பொருட்களின் உலோகவியல் பகுப்பாய்வும், இரும்புத்தாது இருக்கும் தொல்லியல் தளங்களில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அகழாய்வுகளும் இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு மேலும் வலுசேர்க்கும்.
இருந்தாலும், அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவிலிருந்து, இரும்பை பிரித்து எடுக்கும் தொழில் நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று பெருமிதத்தோடு கூறுவோம்.
அதாவது, 5300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியிருக்கிறோம் என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் உலகுக்கு நான் அறிவிக்கிறேன். இது தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ் நிலத்துக்கும் பெருமை!
இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். அதை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாக செய்து வருகிறது. இந்த ஆய்வுகள், பல்வேறு திருப்புமுனைகளையும் உருவாக்கி வருகிறது.
இதற்கு முன்பு, தமிழ்நாட்டில் இரும்பின் அறிமுகம் 4 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வு மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் உலகுக்கு அறிவித்திருக்கிறேன்.
இத்தகைய அகழாய்வு முடிவுகள் தமிழ்நாட்டு வரலாற்றுக்கு மட்டுமல்லாமல் இந்தியத் துணைக்கண்ட வரலாற்றுக்கே முக்கிய திருப்புமுனையாக திகழ்ந்து வருகிறது.
இந்தப் பெருமையை நம்முடைய குழந்தைகளிடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட பெருமைமிக்க தமிழ்ச் சமூகம், உலகுக்கே வழிகாட்டும் அறிவார்ந்த சமூகமாக வளரவேண்டும் என்று எதிர்காலத்துக்கான திசையை காட்டவேண்டும்! பழம்பெருமையை பேசுவது என்பது புது சாதனைகள் படைக்க ஊக்கமாக அமைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ராஜேந்திரன் சக்கரபாணி, தலைமை செயலாளர் முருகானந்தம், முதன்மை செயலாளர்கள் உதயசந்திரன், சந்திரமோகன், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர் திலீப் குமார் சக்ரவர்த்தி, இந்திய தொல்லியல் துறை முன்னாள் தலைமை இயக்குனர் ராகேஷ் திவாரி, தொல்லியல் துறை கல்வியல் ஆய்வு ஆலோசகர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.