என் மலர்
தமிழ்நாடு
ஏழாவது முறை ஆட்சி என்பதே இலக்கு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- திமுக-வுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது.
சென்னை
தி.மு.க. தலைமை செயற் குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
பரபரப்பான அரசியல் சூழலில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்ட துணைப் பொதுச் செயலாளர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. க்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் மறைந்த பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வாசித்தார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கலைஞரின் செயலாளர் கோ.சண்முக நாதன், கும்மிடிப்பூண்டி வேணு, கு.க.செல்வம், விக்கிரவாண்டி நா.புகழேந்தி, தலைமை கழக அலுவலக துணை மேலாளர் ஜெயக்குமார், கண்டோன்மென்ட் சண்முகம், புதுச்சேரி டி.ராமச்சந்திரன், க.சுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் கோதண்டம், கோவை செல்வராஜ், இரா.மோகன், சி.வி.மலையன், ஷீபா.வாசு, ஆலப்பாகம் சண்முகம், புலவர் இந்திரகுமாரி, கயல் தினகரன் உள்ளிட்ட மறைந்த நிர்வாகிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்திற்கு எதிர்ப்பு, அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதன்பின் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக வலைத்தளங்களில் திமுகவை பலப்படுத்த வேண்டும். முதலமைச்சர் தலைமையில் எந்த தேர்தலிலும் தோற்கவில்லை. திமுக-வுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது. நம் கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டிருக்கிறது. 2026 சட்மன்ற தேர்தலில் 200 இல்லை 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். 2026-ல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமல்ல இந்தியாவுக்கான வெற்றி என்று பேசினார்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஏழாவது முறை ஆட்சி அமைக்கணும் என்பது தான் நம்முடைய இலக்கு. 200 தொகுதிகளில் நம்முடைய கூட்டணி வெல்லும். 2026-ல் வெற்றி நமது தான் என்றார்.