search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆட்டோக்களில் காவல்துறை QR குறியீடு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆட்டோக்களில் காவல்துறை QR குறியீடு - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    • ஆபத்து நேரிட்டால் இந்த க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு SOS தகவல் அனுப்ப முடியும்.
    • சாத்தாங்காடு இரும்பு சந்தை வளாகத்தில் மேம்பாட்டு பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர காவல் துறையின் முன்முயற்சியாக, சென்னை மாநகரில் பொதுமக்கள் ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளும் வகையில் காவல் உதவி கியூ.ஆர். குறியீடுகளை வழங்கிடும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்களிடம் கியூ.ஆர்.குறியீடுகளை வழங்கினார்.

    சென்னை மாநகரில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள மாவட் டங்கள், மாநகராட்சிகளில் இருந்து வரும் வாகனங்கள் உட்பட 89,641 ஆட்டோக்கள் இயங்குகின்றன. இவற்றில், 78,000 ஆட்டோக்கள் ஊபர், ரேபிடோ மற்றும் ஓலா போன்ற வாகன சேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

    பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை முதல் கட்டமாக, ஒவ்வொரு ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கும் 88,859 தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பிரத்யேக தனித்துவமான கியூ.ஆர். குறியீட்டை உருவாக்கியுள்ளது.

    இந்த கியூ.ஆர்.குறியீடு ஆட்டோ வாடகை கார்களின் ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் ஒட்டப்படும். இதை பயணிகள் எளிதாக ஸ்கேன் செய்து கொள்ளலாம். அவசரநிலை ஏற்பட்டால், எஸ்.ஒ.எஸ். பட்டனை அழுத்தினால், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும், இது ஆட்டோவின் சரியான இடம் மற்றும் அதன் விவரங்கள், உரிமையாளரின் விவரங்கள் போன்றவை கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவரும். கூடுதலாக, பயணிகள் 112 என்ற அவசர கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு அழைத்து உடனடி உதவியை உறுதி செய்யும் வசதியும் இதில் உள்ளது.

    இப்புதிய கியூ.ஆர்.குறியீட்டின் முக்கிய நன்மை என்னவென்றால், எஸ்.ஒ.எஸ். எச்சரிக்கை அழுத்தும்போது, பயணிகளின் சரியான இடம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தெரிய வருவதால், குறிப்பாக இரவு நேரங்கள் அல்லது தனி சவாரிகளின் போது காவல்துறையினரின் ரோந்து வாகனங்களின் மூலம் துல்லியமாக சம்பவ இடத்திற்கு சென்று உதவியை அணுகும் வசதியும் உள்ளது.

    அவசரநிலை ஏற்பட்டால், போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை காவலர்களால் வாகனத்தின் நிகழ்நேரத்தை கண்காணித்து, அதற்கேற்ப ரோந்து வாகனங்களின் மூலம் உதவிட முடியும்.

    பெண்கள், குழந்தைகள் மற்றும் பெருநகரத்திற்கு பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான பயணத்தை இப்புதிய கியூ.ஆர். குறியீடு உறுதி செய்கிறது. இதன் மூலம், சென்னை முழுவதும் ஒரு விரிவான பாதுகாப்பு வலையமைப்பு உருவாக்கப்படும்.

    இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, பி.கே.சேகர் பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை காவல் ஆணையர் அருண், கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×