என் மலர்
தமிழ்நாடு

தேவைப்பட்டால் 3-வது மொழி : திராவிட இயக்க கொள்கையை உறுதிப்படுத்திய தமிழிசைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்

- பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜனும் வாழ்த்து தெரிவித்தார்.
- தெலுங்கானா கவர்னராக பணியாற்றிய அனுபவத்தில் தெலுங்கு மொழியை அவர் அறிந்து கொண்டுள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜனும் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் மும்மொழியில் வாழ்த்துகிறேன்... என தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மும்மொழியில் வாழ்த்து தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். என் பிறந்தநாளுக்கு சகோதரி தமிழிசை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மும்மொழியில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில் இந்தி இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு. எனக்கு தெலுங்கு தெரியாது. தெலுங்கானா கவர்னராக பணியாற்றிய அனுபவத்தில் தெலுங்கு மொழியை அவர் அறிந்து கொண்டுள்ளார். இதிலிருந்தே, 3-வதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால், அதனை புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்ற திராவிட இயக்க கொள்கையை தமிழிசை உறுதிப்படுத்தி உள்ளார். அவருக்கு என் நன்றி என கூறியுள்ளார்.