என் மலர்
தமிழ்நாடு
தைவான் நாட்டு பெண்ணை கரம்பிடித்த கோவை என்ஜினீயர்
- வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்வதற்கான சட்டரீதியான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
- திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது.
கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த சாமிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஒய்வுபெற்ற வேளாண்அதிகாரி சுப்பிரமணியம்-விஜயலட்சுமி தம்பதியின் மகன் கே.எஸ்.வைஷ்ணவ்ராஜ். சுற்றுசூழல் பாதுகாப்பு பொறியாளர்.
இவர் தைவான் நாட்டில் எம்.எஸ். படித்து அங்கு வேலை பார்த்து வந்தார். அப்போது அந்நாட்டை சேர்ந்த ஜிம்மிசாங்-மிக்கிவாங் தம்பதியர் மகளும் ஆசிரியையுமான கிளாடியா சாங் என்பவருடன் ஒருங்கிணைந்து சமூகசேவை பணியில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது.
தொடர்ந்து அவர்கள் குடும்பத்தினரிடம் காதலை தெரிவிக்க, இருதரப்பு பெற்றோருடன் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டனர். பின்னர் பெண் வீட்டார் கோவைக்கு புறப்பட்டு வந்தனர். தொடர்ந்து வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்வதற்கான சட்டரீதியான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் சாமிசெட்டிபாளையம் பகுதியில் காதலர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு திருமண நாள் குறிக்கப்பட்டது. தொடர்ந்து மங்கலவாத்தியங்கள் முழங்க மணமகன் தாலிக்கயிற்றை மணமகள் கழுத்தில் அணிவித்தார்.
பின்னர் மேட்டுப்பாளையம் ரோடு லட்சுமி திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் தைவான் நாட்டில் இருந்து பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் வந்திருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தமிழர் முறைப்படி விருந்து பரிமாறப்பட்டது.
இதுகுறித்து மணமக்கள் கூறுகையில், சமூக சேவை பணியில் ஈடுபட்டபோது எங்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டு காதலித்து வந்தோம். தொடர்ந்து எங்களுக்கு தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.