என் மலர்
தமிழ்நாடு
வலிப்பு ஏற்பட்ட வாலிபரை மீட்டு தாசில்தார் வாகனத்தில் அனுப்பிய கலெக்டர்- பொதுமக்கள் பாராட்டு
- பொது கழிப்பறை கட்டிடம் ரூ.15 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வலிப்பு நோயால் விழுந்து கிடந்தார்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப் புலியூர் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என நேற்று மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் கடலூர் பஸ் நிலையத்திற்கு இன்று காலை மாவட்ட கண்காணிப்பாளர் மோகன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் அனு மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பொது கழிப்பறை கட்டிடம் ரூ.15 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன், மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் அனு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பொது கழிப்பறையை ஆய்வு செய்துவிட்டு வெளியே வந்தபோது, அங்கு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வலிப்பு நோயால் விழுந்து கிடந்தார். இதை பார்த்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் அந்த வாலிபரை உடனே மீட்டு தாசில்தார் பலராமன் வாகனத்தில் ஏற்றி, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அந்த வாலிபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வலிப்பு ஏற்பட்ட வாலிபரை ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக காத்திருக்காமல் அதிகாரிகள் உடனடியாக தாசில்தார் வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைத்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அதிகாரிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.