என் மலர்
தமிழ்நாடு
மின் விபத்தில் இறந்தால் குடும்பத்துக்கு வழங்கும் நிவாரணம் ரூ.10 லட்சமாக உயர்வு- தமிழக அரசு உத்தரவு
- மின் விபத்தில் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
- மின்விபத்தால் பாதிக்கப்படும் பசுக்கள், எருதுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.25 ஆயிரம் மாற்றமின்றி வழங்கப்படும்.
சென்னை:
மழைக்காலங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்சாரம் தாக்கி பொதுமக்கள் சிலர் உயிர் இழக்கின்றனர். சிலர் காயம் அடைகின்றனர். இதனால், அவர்களுடைய குடும்பம் கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. குறிப்பாக, குடும்பத்தினருக்கு கடும் நிதி இழப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு நிவாரண தொகை உயர்த்தி வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் கடந்த பிப்ரவரி மாதம் சட்டசபையில் அறிவித்தார்.
இதன்படி, மின் விபத்தில் உயிரிழப்பவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி மின்வாரியம் உத்தரவிட்டு உள்ளது. மின்விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.5 லட்சம் நிவாரண நிதி ரூ.10 லட்சமாக அதிகரித்து வழங்கப்படும். அதே போல், இரண்டு கை கால்கள் அல்லது 2 கண்களை இழப்பவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும், ஒரு கைகால் அல்லது ஒரு கண்ணை இழப்பவர்களுக்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1½ லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
அதே சமயம், மின்விபத்தால் பாதிக்கப்படும் பசுக்கள், எருதுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.25 ஆயிரம் மாற்றமின்றி வழங்கப்படும். கடந்த மாதம் 25-ந் தேதி நடைபெற்ற மின்வாரிய இயக்குனர் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.