என் மலர்
தமிழ்நாடு

சீமான் வீட்டு காவலாளிகள் இருவருக்கும் ஜாமின்- நீதிமன்றம் உத்தரவு

- போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார்.
- காவலர்களை தாக்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
சீமானிடம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீசார் கடந்த 24-ந்தேதி சம்மன் அனுப்பி இருந்தனர். அதில் 27-ந்தேதி (அதாவது நேற்று) பகல் 11 மணியளவில் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி இருந்தனர்.
ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரது சார்பில் வக்கீல்கள் ஆஜரானார்கள். சீமான் வெளியூர் சென்றிருப்பதால் அவர் ஆஜராகுவதற்கு 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் கடிதம் கொடுத்தனர்.
இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டின் வெளிப்பக்க கதவில் மீண்டும் சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இந்த சம்மன் நோட்டீசை வளசரவாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் கோபி நேற்று பகலில் ஒட்டி சென்றார்.
அந்த நோட்டீசில், 'நீங்கள் ஏற்கனவே அனுப்பிய சம்மன் பேரில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே இந்த சம்மனை ஏற்று 28-ந்தேதி (அதாவது நேற்று) காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
போலீசார் சம்மன் நோட்டீசை ஒட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த சம்மனை சீமான் வீட்டு பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இந்த காட்சி தொலைக்காட்சிகளில் செய்தியாக ஒளிபரப்பானது. இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு வளசரவாக்கம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்மனை கிழித்த சீமான் வீட்டு பணியாளரை கைது செய்வதற்காக நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்ராஜேஷ் மற்றும் 2 போலீசார் நேற்று பிற்பகலில் சீமான் வீட்டுக்கு வந்தனர்.
அங்கு காவலாளிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் இருவரையும் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் இருவருக்கும் வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவலாளிகள் மீது சம்மனை கிழித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஒரு வழக்கு, காவலர்களை தாக்கியதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதில், ஒரு வழக்கில் மட்டும் இரு காவலாளிகளுக்கும் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.